‘ரூ.2000 நோட்டு’ ஆதரவு + விமர்சனம் முதல் கர்நாடக அரசு பதவியேற்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 20, 2023

‘ரூ.2000 நோட்டு’ ஆதரவு + விமர்சனம் முதல் கர்நாடக அரசு பதவியேற்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 20, 2023
Updated on
4 min read

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை - ஆதரவும் விமர்சனமும்: இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மே 23-ம் தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த நோட்டுகளை மாற்ற அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற முடிவெடுத்துள்ள நிலையில், வங்கிகள் இனி அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இந்த முடிவுக்கு ஆதரவும் விமர்சனமும் நிலவி வருகிறது.

2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை முழுவதும் சரியான ஒன்றே என்றும், அதன் பயன்பாடு குறைந்துள்ளதால் அவைகள் பதுக்கி வைப்பதற்காகவே முதன்மையாக பயன்படுகிறது என்றும் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்த நடவடிக்கை ஏன் சரி என்று ஆறு காரணங்களை விளக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறும் முடிவுக்கு வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ‘2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது ஏற்கெனவே நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவு சிறந்த நடவடிக்கை. இது மிகவும் வரவேற்கத்தக்கது’ என்று கூட்டமைப்புகள் தெரிவித்தன.

‘மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’: முன்பு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, ஏழை மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை வணிகர்களிடம் கொடுத்து தான் மாற்றினார்கள். இதனால் வணிகர்களும் வருமானவரித் துறை விசாரணைக்கு உள்ளானார்கள். 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை மாற்றுவதற்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்க கோருகிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா தெரிவித்துள்ளார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வந்தபோது உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அகற்றுவதாகக் கூறி விட்டு, பின்னர் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதே நகை முரணாக இருந்தது. ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்தால், அதில் எப்போதாவது ஒன்றிரண்டு 2000 ரூபாய் நோட்டுகள் வருகிறது. காய்கறி கடைகளுக்கு வரும் சாமானிய மக்கள் யாரும் 2000 ரூபாய் நோட்டை கொண்டு வருவதே இல்லை. அதனால் இந்த அறிவிப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கோயம்பேடு மலர், காய், கனி, வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் எம்.தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் சராமாரி கேள்வி: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்து “முன்னர் செய்த பணமதிப்பிழப்பு மூலம் நீங்கள் இந்திய பொருளாதாரத்தின் மீது ஆழமான புண்ணை ஏற்படுத்தினீர்கள். அந்த நடவடிக்கையால் தேசத்தின் ஒட்டுமொத்த அமைப்புசாரா தொழில்களும் அழிந்துபோயின. நிறைய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அழிக்கப்பட்டன.

இப்போது இரண்டாவது முறையாகவும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்துள்ளீர்கள். முதலில் செய்த தவறுகளை மூடி மறைக்க இரண்டாம் முறையாக பணமதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளதா? இந்த ஒட்டுமொத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் குறித்து சுதந்திரமான நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்தகைய விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும்” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பு ரூ.17.7 லட்சம் கோடி. அது அத்தனையுமே ஊழல் பணம் என்பது போல் மத்திய அரசு வாதிட்டது. இப்போது 2022-ல் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை ரூ.30.18 லட்சம் கோடி. அப்படியென்றால், 2016-ல் இருந்ததைவிட இப்போது ஊழல் பணத் தொகை அதிகரித்துள்ளதா பிரதமர் அவர்களே" என்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அச்சத்தில் பொதுமக்கள்...”: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா, "எந்த ஒரு பண்பட்ட தேசமும் தம் மக்களை இப்படியாக எப்போதும் பணத்தின் மீது அச்சம் கொண்டிருக்கும்படி செய்யாது. இங்கேதான் மக்கள் எப்போது தங்கள் பணம் டாய்லட் தாளாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை எங்களது வேலட்டுகள் ஏன் வெற்றாவதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும். கர்நாடகாவில் தோற்றுவிட்டு அதை திசைதிருப்ப பாஜக இதனைச் செய்துள்ளது. ஆனால் இது உங்களைக் காப்பாற்றாது மோடி ஜி. அதானியையும் காப்பாற்றாது" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் "முதன்முறை பணமதிப்பிழப்பை பாஜக செய்தபோது நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வார்த்தைகளை அப்படியே நினைவில் வைத்துள்ளேன். அவர் பணமதிப்பிழப்பு என்பது திட்டமிட்ட சூறையாடுதல், சட்டபூர்வமான அழிவு. அதை முழு வீச்சில் அமல்படுத்தினால் அது பிரம்மாண்டமான நிர்வாக தோல்வியாக முடியும் என்று கூறியிருந்தார். இப்போது மீண்டும் ரூ.2000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்துள்ளனர். கடந்த 2016-ல் எடுத்த நடவடிக்கையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டதை இப்போது சற்றும் யோசித்துப் பார்க்கவில்லை" என்று சாடியுள்ளார்.

பிரதமருக்கு அசாதுதீனின் ஐந்து கேள்விகள்: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி, “இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் பிரதமர் மோடி அவர்களில் உங்களிடம் கேட்க ஐந்து கேள்விகள் உள்ளன. ரூ.2000 நோட்டுகளை எதற்காக நீங்கள் அறிமுகம் செய்தீர்கள்? அடுத்ததாக ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெறப்போகிறீர்களா? 70 கோடி இந்தியர்களிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லை. அப்படியென்றால் இங்கே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யப்போகிறவர்கள் யார்? பில் கேட்ஸின் பெட்டர் தென் கேஷ் அலையன்ஸ் நிறுவனத்திற்கும் நீங்கள் செய்த பணமதிப்பிழப்பு 1.0 மற்றும் 2.0 நடவடிக்கைகளுக்கும் என்ன தொடர்பு, NPCI சீன ஹேக்கர்களால் முடக்கப்பட்டதா? என்று ரூ.2000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு தொடர்பாக பிரதமருக்கு ஐந்து கேள்விகளை முன்வைத்துள்ளார்.

‘கர்நாடகப் படுதோல்வியை மறைக்க பாஜக தந்திரம்’: கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில், 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள், கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிழப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "எதிர்பார்த்தது போலவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்றுள்ளது. 2016ல் நாங்கள் கூறியது சரி என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு செய்த மிகப்பெரிய பிழையை சமாளிக்க, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது முட்டாள்தன நடவடிக்கை என்பது உறுதியானது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்: கேஜ்ரிவால்: ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “முதலில் ரூ.2000 நோட்டை கொண்டு வந்தால் ஊழல் ஒழியும் என்றனர். இப்போது, ரூ.2000 நோட்டை தடை செய்வதன் மூலம் ஊழல் தடுக்கப்படும் என்கின்றனர். இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். படிக்காத பிரதமரிடம் யாரும் எதுவும் சொல்லிவிட முடியும். அவருக்கு எதுவும் புரியாது. பொதுமக்கள் தான் கஷ்டப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகவில் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா சனிக்கிழமை பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக டி கே சிவகுமார் பதவி ஏற்றார். இவர்களுடன் மூத்த தலைவர் ஜி. பரமேஸ்வரா உள்பட 8 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட பாஜக இல்லாத பல்வேறு மாநில முதல்வர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பதவி ஏற்பு விழா 2024 மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான விழாவாகவும் பார்க்கப்படுகிறது.

மாநிலக் கல்வி கொள்கை குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்: மாநிலக் கல்விக் கொள்கை குழுவின் செயல்பாடுகளில் எவ்விதத்திலும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருக்கவில்லை என்று பள்ளிக் கல்விக் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, தமிழக அரசின் மாநில கல்வி கொள்கை குழுவில் இருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் விலகினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மேலிடத்தில் இருந்து அதிகாரிகளிடம் இருந்து எனக்கு அச்சுறுத்தல் வந்தது என்று தெரிவித்திருந்தார்.

ஹிரோஷிமாவில் காந்தியின் மார்பளவு சிலை: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார். ஹிரோஷிமாவில் 19 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான்சென்றுள்ள பிரதமர் மோடி சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான நட்பு, நல்லெண்ணத்தின் அடையாளமாக ஹிரோஷிமா நகருக்கு இந்திய அரசால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி 7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருக்கும் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, கொரிய குடியரசு தலைவர் யூன் சுங் யேல் ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும் பசிபிக் பிராந்தியங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார். அதேபோல், ஹிரோஷிமாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்தார். உக்ரைன் ரஷ்ய போருக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in