கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்பு

பதவியேற்பு விழா மேடையில் டிகே சிவகுமார், ராகுல் காந்தி, சித்தராமையா (இடமிருந்து வலமாக)
பதவியேற்பு விழா மேடையில் டிகே சிவகுமார், ராகுல் காந்தி, சித்தராமையா (இடமிருந்து வலமாக)
Updated on
2 min read

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக சித்தராமையா இன்று சனிக்கிழமை பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவி ஏற்றார்.

கர்நாடகாவின் முதல்வர், துணை முதல்வர், 8 அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு விழாவில் 12.30 மணிக்கு கர்நாடகாவின் முதல்வராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சித்தராமையா கடவுளின் பெயரால் ஆணையிட்டு பதவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவருக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர், டிகே சிவகுமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

இவர்கள் இருவரைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வரா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். சித்தராமையா கடவுளின் பெயரால் பதவி ஏற்ற நிலையில் பரமேஸ்வரா அரசியலமைப்பு சட்டத்தின் பெயரால் பதவி ஏற்றார். கர்நாடகாவின் முதல்வர் பதவிக்கான போட்டியில் பரமேஸ்வரா இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சித்தராமையாவின் அமைச்சரவையில் அவர் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

இவரைத் தொடர்ந்து மற்றொரு மூத்த தலைவர் கே.ஹெச்.முனியப்பா அமைச்சராக பதவி ஏற்றார். கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, பி.இசட்.ஜமீர் அகமது கான் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த பதவி ஏற்பு விழாவில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் ஷோரன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா, தேசிய மாநாடு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தவிழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் கேசிஆர் கலந்து கொள்ளவில்லை.

கர்நாடக முதல்வராக சித்தராமையா முதல் முறையாக பதவி ஏற்ற அதே இடத்தில் இந்த முறையும் பதவி ஏற்புவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில், 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் வியாழக்கிழமை காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுத்தது. இந்தநிலையில் அவர்கள் 8 அமைச்சர்களுடன் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர் தோல்விகளில் திணறி வந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த வெற்றி பெரும் ஊக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த பதவி ஏற்பு விழா 2024 மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான விழாவாகவும் பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in