காஷ்மீர் அரசு ஊழியர் மருத்துவ காப்பீடு திட்ட ஊழல் - சத்யபால் உதவியாளர் உள்ளிட்டோருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ சோதனை

சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்
Updated on
1 min read

புதுடெல்லி: காஷ்மீர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பாக, சத்யபால் மாலிக்கின் உதவியாளருக்கு சொந்தமான இடம் உட்பட 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கடந்த 2018 ஆகஸ்ட் 23 முதல் 2019 அக்டோபர் 30 வரை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தார். அப்போது, அரசு ஊழியர்கள் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் ரூ.2,200 கோடி மதிப்பிலான கிரு நீர் மின்சக்தி திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்தைப் பெற தனியார் நிறுவனங்கள் தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக சத்யபால் மாலிக் குற்றம்சாட்டி இருந்தார். இதன் பேரில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்தது.

இது தொடர்பாக காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி விசாரணை நடத்தினர். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சத்யபால் மாலிக் வீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த சூழ்நிலையில், சத்ய பால் மாலிக்கின் முன்னாள் உதவியாளருக்கு சொந்தமான இடம் உட்பட காஷ்மீர் மற்றும் டெல்லியில் உள்ள 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். காஷ்மீர் அரசு ஊழியர்கள் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிஹார், காஷ்மீர், கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்த சத்யபால் மாலிக், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு கடந்த சில மாதங்களாக சத்யபால் மாலிக் மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in