கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் முதல் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 13, 2023

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் முதல் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 13, 2023
Updated on
4 min read

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய 'காங்கிரஸ்': கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் வெற்றியும், 18 இடங்களில் முன்னிலையும் பெற்றிருந்தது.

மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளும் போட்டியிட்டன.இவைகளுடன் 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி, 133 இடங்களில் (செய்தி பதிவு செய்யப்பட்டபோது இருந்த நிலவரம்) வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்தத் தேர்தலில் 224 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 63 இடங்களில் வெற்றியும், 2 இடங்களில் முன்னிலையும் வகிக்கிறது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

பாஜகவை தனிப்பெரும்பான்மையுடன் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதையடுத்து, கர்நாடகாவிலும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


“இது மக்களவைத் தேர்தலுக்கான படிக்கல்.... ”-சித்தராமையா: காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா,"இது நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜெ.பி. நட்டாவுக்கான மக்களின் ஆணை. ஆபரேஷன் கமலாவுக்காக மிக அதிகமான அளவு பணத்தை செலவளித்தனர். ஆனால் அவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. மாநிலத்தின் மதச்சார்பற்றத் தன்மைக்கு பாஜகவால் அச்சுறுத்தல் இருந்தது. மாநிலத்தில் வெறுப்பு அரசியல் இருந்தது. கர்நாடகா அதனைப் பொறுத்துக்கொள்ளவில்லை. இந்த முடிவு அடுத்த ஆண்டு நடக்க இருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான படிக்கல். பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவைத் தோற்கடிப்பதை நான் பார்ப்பேன் என்று நம்புகிறேன். மத்தியில் மதச்சார்பற்ற ஜனநாயகமான அரசு அமையவேண்டிய தேவை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில்,"கர்நாடகாவை மீட்டெடுப்போம் என்று நான், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உறுதி அளித்திருந்தேன். நான் திகார் சிறையில் இருந்தபோது, சோனியா காந்தி என்னைச் சிறையில் வந்து சந்தித்ததை மறக்க முடியாது. காங்கிரஸ் கட்சி அலுவலகம் எங்களது கோயில், அடுத்த கட்ட நடவடிக்கையை அங்கு வைத்து முடிவு செய்வோம்.

எங்களின் தலைவர் சோனியா காந்திக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் என்மீது நம்பிக்கை வைத்து இதனை ஒப்படைத்தார். அப்போதிருந்து நான் தூங்கவே இல்லை. இது தனிப்பட்ட வெற்றியல்ல. சித்தராமையா உள்ளிட்ட அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.


கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது - ராகுல்: கர்நாடகா தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி,"பெரும் முதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. கர்நாடகா மக்களுக்கு நாங்கள் 5 வாக்குறுதிகளை கொடுத்திருந்தோம். முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்த தேசம் அன்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை கர்நாடக மக்கள் நிரூபித்துள்ளனர். மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

"பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்" என்று கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், “பாசிஸ்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

“தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையாக ஆராய்வோம்”: கர்நாடகா மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற நாங்கள் தவறி விட்டோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவினை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக வாக்கு எண்ணிக்கையின் போது," காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அந்தக் கட்சியால் பெரும்பான்மை பெற முடியாது. அதனால் தான் அவர்கள் பிற கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவது உறுதி என்பதால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை" என்று தெரிவித்திருதார்.

“மக்களின் முடிவை ஏற்கிறேன்” - எடியூரப்பா: தேர்தல் தோல்வி குறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா கூறுகையில்,"தேர்தல் முடிவுகளைக் கண்டு பாஜக தொண்டர்கள் பீதி அடைய வேண்டாம். வெற்றியும் தோல்வியும் பாஜகவுக்கு புதிது அல்ல. நாம் இதற்கு முன்பும் தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளோம். கட்சியின் பின்னடவைக்கு என்ன காரணம் என்பதை ஆராய்வோம். மக்களின் இந்த தீர்ப்பை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பாஜக புறக்கணிக்கப்படக் கூடாது. இன்று ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு கட்சி வளர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை கொடுத்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது" என்று தெரிவித்துள்ளார்.


“கர்நாடகாவில் பிரதமர் மோடி தோல்வியடைந்திருக்கிறார்”: கர்நாடகா தேர்தலில் பாஜக, பிரதமர் மோடி மீதான வாக்கெடுப்பு இது என்று கூறி பிரச்சாரம் செய்தது. இந்நிலையில் கர்நாடகா தேர்தல் முடிவு நிலவரம் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதையும், பிரதமர் மோடி தோல்வி அடைந்திருப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

"கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளன. பிரதமர் மோடி தன்னை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எனவே இது பிரதமர் மோடியின் தோல்வி. பஜ்ரங்பலி யார் பக்கம் நின்றார் என்பது இப்போது தெரிந்திருக்கும். அவரது கதாயுதம் ஊழல்வாதிகளின் தலையில் ஓங்கி அடித்துள்ளது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் வெற்றி தமிழக தலைவர்கள் வாழ்த்து: "பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப்பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்கிற மாயையை உருவாக்கினார்கள். அந்த மாயை இன்றைக்கு உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது" கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

“கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி கிடைத்துள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

"இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்துவத்துவக் கும்பலை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்பதை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபித்து இருக்கிறது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: 12 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் , நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அமுதா , உள்துறை செயலாளராகவும், உள்துறை செயலாளராக இருந்த பணீந்தர ரெட்டி போக்குவரத்து துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜக துணியாது: கர்நாடகா மாநிலத்தில் தனிப்பொரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில், 8 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தேர்தலை நடத்த பாஜகவுக்கு கர்நாடக தேர்தல் முடிவுகள் பயத்தை கொடுத்திருக்கும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in