ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு கருத்து முதல் மணிப்பூர் கலவரம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 4, 2023

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்
Updated on
3 min read

காலாவதியாகிவிட்டது ‘திராவிடக் கொள்கை’ - ஆளுநர் கருத்து: திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்தக் கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்.” “மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.” “பரிணாமக் கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்” என்று சொல்லும் ஆளுநர் அவர்களே! களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல், இலவச நலத் திட்டங்கள் - முதல்வர் ஸ்டாலின் கருத்து: “இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாக இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று பாஜகவை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், “திராவிட மாடல் அரசின் சமூக நலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து அக்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், “தமிழகத்தின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதற்கிடையில்,"மேகதாது அணைகட்ட ரூ.9,000 கோடிகளை ஒதுக்கும் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். அவ்வாறு திரும்பப்பெறவில்லை எனில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் முடிவை திமுக கைவிட வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 4 இடங்களில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ : நாடு முழுவதும் 100 ஆரோக்கியமான உணவு வீதிகளை உருவாக்கும் உணவு வீதி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 உணவு வீதிகளும், புதுச்சேரியில் 1 உணவு வீதியும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர்பாபு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு: "இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, கோயில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோயில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும். சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கோயில் நிதியில் வாகனங்கள் வாங்கியிருக்கிறோம் என்று அந்த விதிமீறலை நியாயப்படுத்தியிருக்கிறார். அமைச்சரின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது" என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடரும் கனமழை: மே 7-ல் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் வழக்கு முடித்து வைப்பு: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்ய மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை வழக்கை முடித்து வைத்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, "குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மனுதாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளுடன் நீங்கள் இங்கு வந்தீர்கள். இரண்டு கோரிக்கைகளும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு ஏதாவது நிவாரணம் வேண்டும் என்றால் நீங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட நீதித் துறை நீதிமன்றத்தையோ நாடுங்கள்" என்று தெரிவித்தது.

விருதுகளை திருப்பித் தரும் மல்யுத்த சாம்பியன்கள்: "டெல்லி காவல் துறையினரால் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இந்திய அரசு தங்களுக்கு வழங்கிய விருதுகளால் எந்த பயனும் இல்லை" என்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக புதன்கிழமை இரவு சில மல்யுத்த வீரர்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், குடிபோதையில் இருந்த போலீஸார் வீராங்கனைகனைகளிடம் தவறாக நடக்க முயன்றார் என்று வீராங்கனைகள் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த வீரர், வீராங்கனைகள், "போலீஸார் எங்களிடம் தவறாக நடக்கும்போது இந்த வீரர்கள் எல்லாம் பத்மஸ்ரீ பட்டம் வாங்கியவர்கள் என்று பார்க்கத் தோன்றவில்லையா? மல்யுத்த வீரர்களை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்கள் என்றால், இந்தப் பதங்கங்கள் விருதுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இவற்றை இந்திய அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, நாங்கள் ஓர் எளிய வாழ்க்கையை வாழ்ந்து கொள்கிறோம்" என்றனர்.

இதற்கிடையே இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "பாஜக எப்போதும் இந்தியாவின் மகள்கள் துன்புறத்தப்படுவதைக் கண்டு வருந்தியதில்லை. விளையாட்டு வீராங்கனைகள் மீதான இந்த அத்துமீறல் அவமானகரமானது. பெண்களைப் பாதுகாபோம் என்ற பாஜக முழக்கம் வெற்று கோஷம்" என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் கலவரம்: 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்: மணிப்பூரில் மெய்தி சமூகத்தினரை பட்டியல் - பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடந்த ‘பழங்குடியினர் அமைதி ஊர்வலத்தில்’ வன்முறை வெடித்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டு, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், “என் மாநிலம் பற்றி எரிகிறது. உடனடியாக உதவுங்கள்” என்று பிரதமர் மோடியிடம் எம்.பியும், குத்துச்சண்டை போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், இந்த மோதலுக்கு பாஜகதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மணிப்பூர் பற்றி எரிகிறது. அழகான அந்த மாநிலத்தில் சமூகங்களுக்கு இடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்தி, அமைதியை அழித்துவிட்டது. பாஜகவின் வெறுப்பூட்டும் பேச்சு, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் செயல்பாடு, அதிகாரத்தின் மீது அதற்கு இருக்கும் பேராசை ஆகியவையே இதற்குக் காரணம். அமைதியை கடைப்பிடிக்குமாறு மக்களை காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் மீண்டும் என்கவுன்ட்டர்: கேங்ஸ்டர் அனில் துஜானா சுட்டுக் கொலை: கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்ளிட்ட 62 வழக்குகளில் தொடர்புடைய அனில் துஜானா என்ற பிரபல கேங்ஸ்டர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மீரட் நகரில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியுள்ளது.

முன்னதாக, கடந்த 2017 தொடங்கி இதுவரை 160-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் உ.பி.யில் நடந்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ருவாண்டா நிலச்சரிவு: 120-க்கும் அதிகமானோர் பலி: ருவாண்டாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் வடக்கு மாகாணங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக மழையினால் மலை பிரதேசங்கள் கடும் நிலச்சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 120-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர் என்று அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in