புதுமனை புகுவிழா பந்தலில் மின்சாரம் பாய்ந்து விபரீதம்: 4 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருப்பதி: திருப்பதி அருகே புதுமனை புகுவிழா பந்தலில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பதியை அடுத்துள்ள அன்னமய்யா மாவட்டம், பெத்த திப்ப சமுத்திரம் மண்டலத்தில் உள்ள கானுகமாகுல பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி. இவர் புதிதாக கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களுக்கு உணவுப் பரிமாற வெளியில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென காற்று வீசியதில் பந்தலில் இருந்த இரும்பு கம்பி அசைந்து, தாழ்வாக சென்ற உயரழுத்த மின்சார கம்பியில் சிக்கியது. இதில் சாப்பிட்டுக்கொண்டிருந்த லட்சுமம்மாள் (80). விஜய் பிரசாந்த் (27) ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த லட்சுமண குமார் (45), சாந்த குமாரி (40) ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

ஏரியில் 3 சிறுவர்கள் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம், பெத்தபள்ளி மாவட்டம், நியூபோ ரெட்பள்ளி கிராமத்தை சேர்ந்த உமா மகேஸ்வர் (12), சாய் சரண் (12), விக்ரம் (13) ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று முன்தினம் நீச்சல் பழக, பெத்த செருவு எனும் ஏரியில் இறங்கியுள்ளனர். இதில் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in