தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைவர்கள் நாட்டுக்காக உயிரை தர முன்வர வேண்டும் - அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைவர்கள் நாட்டுக்காக உயிரை தர முன்வர வேண்டும் - அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் தேசிய அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்த சாதனையை கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கொண்டாடுவதற்காக டெல்லியிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு முதல்வரும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட10 ஆண்டுகளிலேயே தேசிய அந்தஸ்து கிடைத்துள்ளது. இது அதிசயம் மற்றும் நம்பமுடியாத சாதனையாகும். இதன்மூலம் நமக்கும், நமது கட்சிக்கும் மிகப்பெரிய பொறுப்பை மக்கள் வழங்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கு பங்களித்த மற்றும் தேசிய கட்சி அந்தஸ்தை அடைய உதவிய அனைவருக்கும் நன்றி.

யாருடைய மிரட்டலுக்கும், வன்முறைக்கும், அடிதடிக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களோ, நிர்வாகிகளோ பயப்படக்கூடாது. உங்களை 8 முதல் 10 மாதங்கள் வரை அவர்களால் சிறையில் தள்ள மட்டுமே முடியும். அதன் பிறகு அவர்களால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

தேவைப்பட்டால், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கவேண்டும். சவால்களை எதிர்கொண்டு சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in