

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ''குற்றவியல் வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 102(1)(e)-ன் கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் எனும் நிலையில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம் தீர்ப்பு வெளியான மார்ச் 23ம் தேதியில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?: ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிப்பதன் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல், ''ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை எப்போது விதிக்கப்பட்டதோ அப்போதே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார். இதுதான் சட்டத்தின் நிலை. அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும். மேல்முறையீட்டில் நீதிமன்றம், இந்த தீர்ப்பை நிறுத்திவைத்தால் மட்டும் போதாது. கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக முடியும்'' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி, ''கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றத்தில் தடை பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வரும் காலத்தில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்: எதிர்க்கட்சியினர் எதிர்வினைகள்: ராகுல் காந்தி தகுதி நீ்க்கம் செய்யப்பட்டது குறித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் “இதை நாங்கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்திருக்கின்றனர். இந்திய ஜனநாயகம் சாந்தியடையட்டும்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தான் முதன்மையான இலக்குகளாகியுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
"திருடரை திருடர் என்றழைப்பது நம் நாட்டில் கிரிமினல் குற்றமாக இருக்கிறது. ஆனால், உண்மையான திருடர்களும், கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாகத் தான் இருக்கின்றனர். ராகுல் காந்தி தான் தண்டிக்கப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்தின் மீதான நேரடி படுகொலை. இங்கே அனைத்து அரசு இயந்திரங்களும் அழுத்தத்தில் இருக்கின்றன. இதுதான் சர்வாதிகாரத்தின் முடிவுக்கான தொடக்கம். இந்த யுத்தத்திற்கு ஒரு சரியான திசை மட்டும் கொடுக்கப்பட வேண்டும்" என்று உத்தவ் தாக்கரே கட்சி தெரிவித்துள்ளது.
"எங்களுக்கும் காங்கிரஸுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. மத்திய அரசு எங்களை தாக்கியபோது காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கைத்தட்டியும்கூட உள்ளனர். எதிர்க்கட்சிகளின் குரலை மத்திய அரசு ஒடுக்கினால் யார்தான் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவது? சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். இதுவே தொடர்ந்தால் பிரதமர் மோடியும், பாஜகவினரும் மட்டுமே தான் எல்லா தேர்தலிலும் போட்டியிட வேண்டியிருக்கும். இது சர்வாதிகாரம்" என்று ஆம் ஆத்மி டெல்லி அமைச்சர் சுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமைக்கு பயம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து: “ராகுல் காந்தியைப் பார்த்து எந்தளவுக்கு பாஜக தலைமை பயந்து இருக்கிறது என்பது தகுதி நீக்க நடவடிக்கை மூலம் தெரிகிறது. இதன் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனிடையே, “ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விரையில் அறிவிக்க இருக்கிறார். அந்த அறிவிப்பின்படி நடைபெற இருக்கிற போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் முழு அளவில் பங்கேற்க அணி திரண்டு வரும்படி அழைக்கிறேன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்: தமிழக தலைவர்கள் கருத்து: ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளதாக, தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"ஒரு சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, இந்தியாவின் உச்சபட்ச குடும்பத்தில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் அது பொருந்தும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
‘ஆப்சென்ட்’ விவகாரம்: பேரவையில் அன்பில் மகேஸ் விளக்கம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் நாளில் நடந்த மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பேரவையில் விளக்கம் அளித்தார். அதில், “வரும் கல்வி ஆண்டில் ஒரு வாரத்தில் 3 நாட்கள், 2 வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வராத மாணவர்களின் பட்டியல் தயார் செய்து நடடிக்கை எடுக்கப்படும். 4 வாரத்திற்கு மேல் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால், அந்த மாணவர்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கப்படும். இதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு: அமைச்சர் தகவல்: என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து பேரவையில் பதில் அளித்து பேசிய அமைச்சர், "என்எல்சி நிறுவனத்தில் தற்போதுள்ள 1711 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் நிலம் அளித்தவர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது. இதை உறுதிசெய்ய உயர்மட்ட குழுவை முதல்வர் அமைத்துள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 3,916 இடங்கள் வெள்ள பாதிப்பு பகுதிகள்: தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 317 இடங்களில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது. 719 இடங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும், 1086 இடங்கள் மிதமான பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும், 1714 இடங்கள் குறைவான பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மனு: புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி 14 எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது.
அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை - டிக்டாக் சிஇஓ விளக்கம்: அமெரிக்கர்களை உளவு பார்த்து சீன அரசுக்கு தகவல் வழங்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டை டிக் டாக் சிஇஓ சவ் சி சூவ் மறுத்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளிக்க சவ் சி சூவ் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜரானார். அப்போது அவர் “எங்கள் நிறுவனம் சீனாவுக்காகவோ, பிற நாடுகளுக்காகவோ செயல்படவில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். எங்கள் தளத்தை 150 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் விரும்புகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பது நன்கு தெரியும்” என்றார்.