Published : 15 Mar 2023 05:33 AM
Last Updated : 15 Mar 2023 05:33 AM

உளவு சாதனம், கேமராவுடன் வந்த புறாவை பிடித்த ஒடிசா மீனவர்கள் - உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலீஸார் விசாரணை

புறாவின் கால்களில் கட்டப்பட்டுள்ள கேமராவைக் காட்டும் மீனவர்கள்.

புவனேஸ்வர்: உளவு சாதனங்கள் மற்றும் கேமராவுடன் வந்த புறா ஒன்று ஒடிசா மாநில மீனவர்களிடம் சிக்கியது. இந்தப் புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகம் அருகே 40 கடல் மைல் தொலைவில் அண்மையில் மாநில மீனவர்கள் தங்களது சாரதி என்ற படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தங்களது படகில் ஒரு வெள்ளை நிறப் புறா வந்து அமர்ந்ததை மீனவர்கள் பார்த்தனர். படகை இயக்கிய சங்கர் பெஹரா என்ற மீனவர், அந்த வெள்ளை புறாவைப் பிடித்து பரிசோதித்தார். அப்போது அதன் காலில் கேமரா, மைக்ரோசிப் போன்ற உளவு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. கேமரா தெரியாதவகையில் அதன் மீது கருப்பு டேப் போட்டு ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் புறாவின் இறக்கைகளில் வெளிநாட்டு மொழிகளில் ஏதோ எழுதியிருந்தது. இதையடுத்து அந்தப் புறாவை போலீஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சங்கர் பெஹரா கூறும்போது, “இந்த புறா சீனாவிலிருந்து உளவு பார்க்க வந்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம். ஒடிசா கடற்கரையில் உளவு பார்க்க இது அனுப்பப்பட்டு இருக்கலாம்" என்றார்.

இதுகுறித்து ஜெகத்சிங்பூர் போலீஸ் எஸ்.பி. ராகுல் கூறும்போது, “இந்தப் புறாவையும், உளவு சாதனங்களையும் மாநில தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். அதன் இறக்கைகள் மீது என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையும் கண்டுபிடிக்க மொழி அறிஞர்களின் உதவியை நாடியுள்ளோம். இதுவரை இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.

இந்தப் புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டு இருக்கலாம் என மாநில போலீஸார் சந்தேகப்பட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாரதீப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள பலசோர் தீவில் ஏவுகணை சோதனை மையம், ஒடிசா கடலோரப் பகுதியில் ஐஓசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x