ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு மாநிலங்களவையில் பாராட்டு, வாழ்த்து

ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு மாநிலங்களவையில் பாராட்டு, வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: ஆஸ்கர் விருது வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படகுழுவினருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் இன்று (மார்ச் 14) வாழ்த்து தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடர்ந்து நடைபெற்றது. காலையில் அவை நடவடிக்கைத் தொடங்கியதும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆஸ்கர் விருதுகள் வென்றதற்காக ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த அங்கீகாரம், நமது இந்திய கலைஞர்களின் பரந்துபட்ட திறமை, மகத்தான படைப்பாற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. உலக அளவிலான நமது எழுச்சிக்கான மற்றொரு அம்சம் இது என்று தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் ஆஸ்கார் விருது வென்றதற்காக தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும், ''இது நாட்டின் பங்களிப்பு, ‘ஆர்ஆர்ஆர்’ ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆகியவை ஆஸ்கர் வென்றதை பாஜக தனதாக ஆக்கிக்கொள்ளக்கூடாது'' என அவர் குறிப்பிட்டார். மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜெயாபச்சன், அமர் பட்நாயக், டாக்டர் சாந்தனு சென், பிரியங்கா சதூர்வேதி, ரஞ்சித் ராஜன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் ஆஸ்கார் விருது வென்ற படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். சிவசேனா எம்பி பிரியங்கா சதூர்வேதி வாழ்த்து தெரிவிக்கையில், பாலிவுட்டை புறக்கணிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

அவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ''தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் உருவாக்கத்திற்கு இரண்டு பெண்கள் காரணமாக இருந்திருக்கிறர்கள், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் திரைக்கதையாளர் மாநிலங்களவை உறுப்பினர்'' என்றார். பிரதமர் மோடியின் விருப்பத்தை கோயல் பேசுவதாக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அவைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய அலுவல்களுக்கான விவரங்கள் உறுப்பினர்களின் மேஜையில் வைக்கப்பட்டன. இன்று வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து அவைத்தலைவர் வாசிக்கத் தொடங்கியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரம் குறித்து கோஷங்கள் எழுப்பினர். அமளி தொடர்ந்ததால், மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in