

‘இந்தியா வளர்ந்த நாடாக மாற தொழில்நுட்ப பயன்பாடு உதவும்’: வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை இந்தியா அடைய தொழில்நுட்ப பயன்பாடு உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை சாத்தியப்படுத்தியது தொழில்நுட்பம்தான். ஜன்தன் எனும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம், ஆதார், மொபைல் எண் ஆகியவை ஏழைகளுக்கு நன்மைகளை வழங்கும் மும்மூர்த்திகளாக இருக்கின்றன. 21 ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பம் சார்ந்தது. இணைய தொழில்நுட்பம், டிஜிட்டல் என்பதாக மட்டும் நாம் அவற்றை சுருக்கிவிட முடியாது” என தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய வலியுறுத்தல்: இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே உருவாக இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எஸ். ஜெய்சங்கர், ''இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே உருவாக இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த்தின் மூலம் இரு தரப்புமே பலனடைய முடியும். இதற்கான பேச்சுவா்த்தை குறிப்பிட்ட காலவரைக்குள் முடிவடைய வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
வெப்ப அலை நோய்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்: நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், மார்ச் 1-ஆம் தொடங்கி அன்றாடம் வெயில் சம்பந்தமான நோய்களைக் கண்காணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
‘ஆதார் எண்ணை இணைக்க இனி அவகாசம் கிடையாது’: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவ.15-ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமை வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கெடு முடிகிறது. இந்நிலையில், 1.50 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றும், ஏற்கெனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சினை இல்லை: டி.ராஜா: “2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படுவதே முக்கியம். ஆகவே, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம். மதச்சார்பற்ற கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சினை இல்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம். ஏற்கெனவே அதுபோல பிரதமர் தேர்வு நடந்துள்ளது. அனைவரும் கூட்டாக பிரதமரை தேர்தலுக்கு பிறகு தேர்வு செய்யலாம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் கார் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு: வாணியம்பாடி அருகே பள்ளிக்கு மிதி வண்டியில் சென்ற 3 மாணவர்கள் மீது கட்டுபாட்டை இழந்து ஓடிய கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலை விபத்தில் பலியான 3 அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்திய செமிகன்டக்டர் சந்தை உயரும்: டெலோய்ட்டி இந்தியா: இந்திய செமிகன்டக்டர் சந்தை இன்னும் 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.4.55 லட்சம் கோடியாக உயரும் என்றும், இது 2030க்குள் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் டெலோய்ட்டி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா மனு: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். மதுபான ஊழல் வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்: ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு மார்ச் 2 ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உள்பட பல்வேறு நட்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அவரது அழைப்பை ஏற்று சீன வெளியுறவு அமைச்சர் கின் காங் புதுடெல்லி வர உள்ளார். இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீன வெளியுறவு அமைச்சர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் வட கொரியா: வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது வட கொரியாவில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், முக்கியச் சந்திப்பை அதிகாரிகளுடன் கிம் நடத்தியிருக்கிறார். அதில், தானிய உற்பத்தி இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தையும், விவசாய உற்பத்தி செயல்முறையை மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் கிம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.