

பரேலி: சீனாவைச் சேர்ந்த இளைஞர் வாங் கவுஜுன். இவர் தகுந்த விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து டெல்லியின் பல்வேறு இடங்களில் உளவு பார்த்துள்ளார். தகுந்த விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த குற்றத்துக்காக உ.பி. போலீஸார் இவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அப்போதுதான் இவர் டெல்லியின் முக்கிய இடங்களை உளவு பார்த்தது தெரிய வந்துள்ளது. இவரை 9 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இவரை விரைவில் லக்னோ, டெல்லி நகரங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். டெல்லியில் இவர் தங்கியிருந்ததற்கான வீடியோ ஆதாரங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவரிடமிருந்து செல்போன், கேமரா உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவிலிருந்து தாய்லாந்து சென்ற கவுஜுன் பின்னர் அங்கிருந்து நேபாளத்துக்கு வந்துள்ளார்.
நேபாளத்திலிருந்து கடந்த 14-ம் தேதிக்கு டெல்லிக்கு பேருந்து மூலம் வந்துள்ளார். பின்னர் டெல்லியில் முக்கிய இடங்களை உளவு பார்த்துவிட்டு பேருந்து மூலம் நேபாளத்துக்கு திரும்பியபோது அவரை போலீஸார் லக்கிம்பூர் கேரியிலுள்ள கவுரிஃபன்யா-நேபாள எல்லையில் கைது செய்துள்ளனர்.