

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை: பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக குற்றம்சாட்டி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணப் பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜி20 நாடுகளுக்கு ஆர்பிஐ கவர்னர் அழைப்பு: உலக பொருளாதாரம் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிதி தன்மை, கடன் நெருக்கடி போன்ற சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஜி 20 நாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
“வடகிழக்கு மாநிலங்களே பாஜகவின் அஷ்டலட்சுமிகள்”: "வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஏடிஎம் இயந்திரமாக பயன்படுத்துகிறது. பாஜக அந்த எட்டு மாநிலங்களை அஷ்டலட்சுமிகளாக கருதிகிறது. மேலும் அதன் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது" என்று பிரதமர் மோடி தெரவித்துள்ளார். நாகாலாந்தின் திமாபூர் நகரில் நடந்த தேர்ல் பேரணி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் "நாகாலாந்துக்கான எங்களின் மந்திரம் என்பது, அமைதி, முன்னேற்றம், செழிப்பு. இதனால் தான் மக்கள் பாஜகவின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என்றார்
மாதவிடாய் கால விடுமுறை குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு: மாதவிடாய் கால விடுமுறை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கின் மீது வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ''இந்த விவகாரம் பல்வேறு கொள்கை பரிணாமங்களைக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை இந்த மனு குறித்து பரிசீலித்து, மனுதாரரின் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம்,பெண்களுக்கு பணிக்காலங்களில் மாதவிடாய்க்கு விடுமுறை அளித்துள்ள முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமை ஸ்பெயினுக்கு கிடைத்துள்ளது.
“இபிஎஸ் தான் நிரந்தர பொதுச் செயலாளர்”: சென்னை, ராயபபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உள்ளது. 99 சதவீத நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் உள்ளனர். இபிஎஸ்.தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். விரைவில் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக தலைமைக் கழகம் முடிவு செய்யும்” என்று கூறினார்.
மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம்: ஓபிஎஸ் பேட்டி: அதிமுக பொதுக் குழு தீர்ப்பு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், "மக்களை நாடி செல்லும் நிலையில் நாங்கள் உள்ளோம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். இது தொண்டர்களுக்கான இயக்கம். எங்களின் படை புறப்பட்டுவிட்டது. மக்கள் மன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்த தீர்ப்பு பின்னடைவு இல்லை. நாங்கள் ஏதற்காக தனிக் கட்சி தொடங்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அணிதான் திமுகவின் 'பி' டீம். அவர்களைப் பற்றிச் சொல்ல ஆயிரம் விசயம் உள்ளது. இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம்” என்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக 725 புகார்கள்: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 725 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் போலீஸ் தரப்பில் 75 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு குழு சார்பில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குக்கர் பட்டுவாடா தொடர்பாக ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் இதுவரை 13 புகார்கள் தரப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்ட 12 பேர் அலட்சியமாக பணியாற்றியதாக நோட்டீஸ் கொடுத்துள்ளோம்" என்றார்
இரட்டை இலை இருந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது: தினகரன்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இரட்டை இலை சின்னம் இருந்தும் பழனிசாமியால் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை, அதிமுக அழிவுக்குக் காரணம் பழனிசாமியின் ஆணவமும், அகங்காரமும் தான், அதிமுகவை பழனிசாமி பிராந்திய கட்சியாக மாற்றிவிட்டார்" என்றார்
கனிம வள கடத்தலைத் தடுக்க தொடர் சோதனைகள்: கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிம வளஙகள் கடத்தப்படுவதைத் தடுக்க தொடர் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் தீர்மானத்தில் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா: ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகளால் வரைவுத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.