Published : 24 Feb 2023 01:12 PM
Last Updated : 24 Feb 2023 01:12 PM

துரோகம் பழனிசாமியின் மூலதனம்; இரட்டைஇலை இருந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது - டிடிவி தினகரன்

ஜெயலலிதா பிறந்தநாளில் மதுரைக்கு வந்த அமமுக பொதுச்செயலாளர் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மதுரை: துரோகம் என்பது பழனிசாமியின் மூலதனம், இரட்டை இலை சின்னம் இருந்தாலும் திமுகவை அவரால் வீழ்த்த முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கோச்சடையில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ''ஜெயலலிதா பிறந்தநாளில் அம்மாவிற்கு மதுரையில் மரியாதை செலுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது தவறானவர்கள் கையில் இரட்டை இலை சின்னம் உள்ளது, பழனிசாமியிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோதே லட்சியத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அமமுக, ஆனால் இன்று வியாபார நோக்கோடு லாபத்திற்காக எடப்பாடியுடன் சிலர் இருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் அமமுக வளர்ந்துவரும் இயக்கமாக மாறியுள்ளது, இரட்டை இலை துரோகிகளின் கையில் இருந்ததால் திமுக வெற்றி பெற்றது, பழனிசாமி வெற்றி என்பது பண பலம், ஆட்சி அதிகாரம் இருந்ததால் வந்துள்ளது. ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருந்தால் யாராக இருந்தாலும் அதிகாரத்தில் இருந்திருக்கலாம், இரட்டை இலை சின்னம் இருந்தும் பழனிசாமியால் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை, அதிமுக அழிவுக்குக் காரணம் பழனிசாமியின் ஆணவமும், அகங்காரமும் தான், அதிமுகவை பழனிசாமி பிராந்திய கட்சியாக மாற்றிவிட்டார்.

அதிமுகவில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல; டெண்டர்கள், எங்களுக்கு துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அச்சம் இருக்கலாம் அதனால் தான் சேர்க்கமாட்டேன் என்கிறார் பழனிசாமி. எனக்கு தகுதி இல்லை நான் தேவை இல்லை என்கிறார். ஆனால் ஆட்சி அதிகாரம் பணபலம் இருந்தும் திமுக ஆட்சிக்கு வருவதை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை, ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற முடியாது,

பழனிசாமி மெகா கூட்டணி என்றார். ஆனால் தேமுதிக, பாமக வெளியேறிவிட்டது, வன்னியர் உள் இட ஒதுக்கீடு 10.5% அறிவித்து முறையாக நடைமுறைபடுத்த முடியாமல் மக்களை ஏமாற்றிவிட்டார், பாமக பழனிசாமியிடம் இருந்து நல்ல வேலையாக தப்பித்துவிட்டனர் வேண்டாம் என ஒதுங்கிவிட்டனர், ஒரு கண்ணில் வெண்ணைய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல வன்னியர் உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது, துரோகம் தான் பழனிசாமியின் மூலதனம். ஆட்சி அதிகார அகங்காரத்தால் பணத்தால் பழனிசாமி ஆட்டம் போடுகிறார், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்த சுற்றில் பழனிசாமி தற்காலிக வெற்றி பெற்றுள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறியுள்ளனர், தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை, அம்மா, எம்ஜிஆரின் சின்னம் பழனிசாமியிடம் கிடைத்ததால் அது பின்னடவை சந்தித்துள்ளது. ஜெயலலிதா உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு செயல்பட்டால் திமுக என்ற தீய சக்தியை வெல்ல முடியும், அனைவரும் ஒன்றிணைந்து எங்களோடு வருவார்கள். பழனிசாமி ஜெயலலிதா தொண்டராக உணரவில்லை அகங்காரத்தில் குதிக்கிறார், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்காக நாங்கள் 40 சீட் கேட்டோம் ஆனால் பழனிசாமி தவறான முடிவால் ஆட்சி பொறுப்பிற்கு வர முடியவில்லை.

பழனிசாமி எப்போதும் திருந்துவதாக தெரியவதில்லை, நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு போகலாம், தேர்தல் ஆணையம் போகலாம். கட்சி இருப்பதால் மட்டும் சோபித்துவிட முடியுமா? இந்த தீர்ப்பு மூலம் தற்காலிகமான தீர்வு தான் கிடைத்துள்ளது. பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என அறிவித்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது. கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுகவை வீழ்த்த முடியாத நிலையில் பழனிசாமி உள்ளார், பணபலமும், மூத்த நிர்வாகிகளும் உடன் இருந்தால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. எனது உயரம் எனக்கு தெரியும், நாடாளுமன்றத் தேர்தலில் எனது தலைமயில் கூட்டணி அமைக்கவில்லை, சுவாசம் உள்ளவரை போராடுவோம், அமமுக தான் ஜெயலலிதா இயக்கம், யாராவது ஒரு சிலரை பணம் கொடுத்து வாங்கலாம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x