ம.பி., கேரளா, சத்தீஸ்கர், அந்தமானில் 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுடெல்லி: ம.பி., கேரளா, சத்தீஸ்கர், அந்தமானில் 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கெனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில் சுமார் 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் மத்திய பிரதேசத்தில் உயிரிழந்தவர்கள் (8.46 லட்சம்), முகவரி மாறியவர்கள் (22.78 லட்சம்) உட்பட 42,74,160 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதுபோல கேரளாவில் உயிரிழந்தவர்கள் (6.49 லட்சம்), முகவரி மாறியவர்கள் (8.16 லட்சம்) உட்பட 24.08 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
சத்தீஸ்கரில் 27.34 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர். அந்தமான் நிக்கோபர் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 3.1 லட்சம் வாக்காளர்களில் 64 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 22-க்குள்: இந்தப் பட்டியலில் விடுபட்டவர்கள் வரும் ஜனவரி 22-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
