

பாட்னா: நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்க உதவிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டில் பிஹார் சட்டப்பேரவையில் உரையாற்றிய அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பிஹார் அரசு சார்பில் ராஜ்கிர் பகுதியில் 455 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அங்கு கடந்த 2016-ம் ஆண்டில் கட்டுமான பணிகள் தொடங்கின. குறிப்பாக மத்திய வெளியுறவுத் துறை சார்பில் ரூ.2,717.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் சீனா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட 17 நாடுகளில் இருந்து நிதி திரட்டப்பட்டது. இதன்மூலம் நாளந்தா பல்கலைக்கழகம் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
தற்போது நாளந்தா பல்கலைக்கழகத்தில் இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பங்கேற்று உள்ளார். அவர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “பிரம்மாண்டமான நாளந்தா பல்கலைக்கழகம் பிரமிப்பூட்டுகிறது. இதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளியுறவுத் துறையை மனதாரப் பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.