

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரை அடுத்தஇரிஞ்சல்குடாவைச் சேர்ந்தவர் பிரணவ் மனப்பரம்பில் (31). 10ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது இருசக்கர வாகன விபத்தில் சிக்கினார். அதில் பிரணவின் முதுகு தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறி உள்ளது. ஆனாலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரணவ் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கோயில் திருவிழாக்கள் மற்றும் கலாச்சார விழாக்களில் நண்பருடன் பங்கேற்று வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதலங்களில் பகிர்ந்துள்ளார். அது வைரலாக பரவியது. இந்த வீடியோக்களை பார்த்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 19 வயது சஹானா, பிரணவ் மீது காதல் வயப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வீட்டைவிட்டு வெளியேறிய சஹானா, இரிஞ்சல்குடா நகருக்கு தனியாக நேரில் சென்று பிரணவை சந்தித்து விஷயத்தைக் கூறியுள்ளார். அப்போது, பிரணவும் அவரது குடும்பத்தினரும் இந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு சஹானாவை வலியுறுத்தி உள்ளனர்.
இதை ஏற்காத நிலையில், வேறு வழியின்றி பிரணவும் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளார். இருவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொடுங்காலூரில் உள்ள ஸ்ரீ சங்கரநாராயணன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
திருமணமாகி 3 ஆண்டுகள் முடிந்த நிலையில், பிரணவின் உடல்நிலை கடந்த வெள்ளிக் கிழமை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.