மத்திய பட்ஜெட் முதல் அதிமுக வேட்பாளர் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.1, 2023

மத்திய பட்ஜெட் முதல் அதிமுக வேட்பாளர் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.1, 2023
Updated on
3 min read

இந்தியாவின் வளர்ச்சிக்கு 7 இன்ஜின்கள்: நிர்மலா சீதாராமன்: 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொதுப் போக்குவரத்து, நீர்நிலைகள், கட்டுமானம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய 7 இன்ஜின்களை இணைத்து செயல்படுத்தி இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்வோம். இதற்கு எரிசக்தி பகிர்மானம், தகவல்கள் தொழில்நுட்பம், சமூக கட்டமைப்பு, நீர்நிலை பாதுகாப்பு துறைகள் துணையாக இருக்கும்” என்றார்.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு: மத்திய பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது. 2023-24 அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.

ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5% வரி, ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீதம் வரி,
ரூ,12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவீதம் வரி, ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

அதேபோல் புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில், ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே இந்த வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளம்: பிரதமர் புகழாரம்: நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "இந்த பட்ஜெட் சமூகத்தின் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகளின் கனவுகளை நனவாக்கும். இந்தியா வளர்ந்த நாடாக உருவாக இந்த பட்ஜெட் வலுவான அடித்தளத்தை அமைக்கும். அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் அனைவருக்கும் பலன் தரும். இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு புதிய சக்தியைப் பாய்ச்சும். நாட்டை செதுக்குபவர்கள் விஸ்வகர்மாக்கள் தான். அவர்களுக்காக இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்குமான பட்ஜெட்" என்று தெரிவித்தார்.

விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்வு: 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயத் துறை மற்றும் கல்விக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். 2023-24 நிதி ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கடந்த பட்ஜெட்டில் இது 18.5 லட்சம் கோடியாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இதன்மூலம், விவசாயக் கடன் தொகை 8.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் - தமிழக விவசாயிகள் அதிருப்தி: மத்திய பட்ஜெட் 2023-ல் பயிர் கடன் தள்ளுபடி, வட்டி இல்லா வேளாண் கடன்கள் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தினர், கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற தேர்தலைக் கருத்திலே கொண்டு தேர்தல் லாபம் கருதி அங்கு சுமார் ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டினர்.

மத்திய பட்ஜெட் எதிரொலி: விலை உயரும், குறையும் பொருட்கள்: 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து சில பொருட்களுக்கான விலை உயர்த்தியும், சில பொருள்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தங்கம், வெள்ளி நகைகள், கவரிங் நகைகள், சிகரெட், இறக்குமதி செய்யப்பட்ட கார், இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள், மின்சார சமையலறை புகைபோக்கி, இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள், பொம்மைகள் ஆகியவைகளின் விலை உயரும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சிகள், லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள் போன்றவைகளின் விலை குறையும்.

ஏழைகளுக்கு ஏதும் இல்லை: காங்., திரிணமூல் காங். விமர்சனம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ''விரைவில் வரக்கூடிய 3, 4 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரானது என விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ''இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வை கொண்டது அல்ல. சந்தர்ப்பவாத பட்ஜெட் இது. இந்த பட்ஜெட் ஒரு வகுப்பினருக்கு மட்டுமே பயனளிக்கும். நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் எவ்வித தீர்வும் இல்லை. இந்த பட்ஜெட் வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது'' என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் : தமிழக தலைவர்கள் கருத்து: பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி எல்லைக்குள் இருப்போர் வரி விலக்கு பெறும் உச்ச வரம்பு ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. பழைய வரி விதிப்பில் இருந்து புதிய வரி விதிப்பு முறைக்கு நெட்டித் தள்ளும் வஞ்சக வலை விரிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

"அடுத்த வரும் 25 ஆண்டுகள் அமிர்த காலமாக இருக்கும் என்று நம்முடைய பிரதமர் கூறியிருப்பதால், அந்த 25 வருடத்துக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

"தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் பெரிதாக இல்லாததும் ஏமாற்றமளிக்கிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் தனது பதிலுரையில் அளித்திட வேண்டும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் விரைவில் காலை உணவுத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி: "காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பகுதியிலே, ஒரு சில மாவட்டங்களில் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விரைவில் முழுமையாக அதுவும் நிறைவேற்றப்பட இருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடக்கிறது. இதில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என முன்னாள் முதல்வர் பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், கூட்டணிக் கட்சிக்காக தனது வாய்ப்பை விட்டுக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in