

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் 450 அரசுப் பேருந்துகளும் பெங்களூருவின் அத்திப்பள்ளி கிராமம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய போக்குவரத்து அதிகாரி ஒருவர், ''தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது தற்காலிக நடவடிக்கைதான். தமிழ்நாட்டில் என்ன நடந்துவருகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்'' என்றார்.
தமிழக பேருந்துகள் வழக்கம் போல இயங்கின
வழக்கமாக திங்கட்கிழமை காலை வேளைகளில் பேருந்துகள் நிரம்பி வழியும். ஆனால் இன்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின.தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பணியாளர்கள் சிறு கலக்கத்துடனேயே பேருந்துகளில் பயணித்ததைக் காண முடிந்தது.
பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில் பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பெங்களூரு நகரம் முழுவதும் சுமார் 250 போலீஸ் ரோந்து வண்டிகளும், 400 போலீஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 25 ஆயுத ரிசர்வ் போலீஸ் படையினரும் பெங்களூருவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி கூறும்போது, ''இதுவரை எவ்வித அசம்பாவித நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இது முற்றிலுமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். இதுகுறித்துப் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.