

டெல்லியில் போலீஸார், வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து கரோல் பாக் பகுதியில் நடத்திய சோதனையில் விடுதி ஒன்றிலிருந்து ரூ.3 கோடியே 25 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மும்பையைச் சேர்ந்த ஹவாலா இடைத்தரகர்களுடையது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
இது குறித்து டெல்லி காவல் துறை இணை ஆணையர் ரவீந்திரா யாதவ் கூறும்போது, "டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனிங் மெஷின்கூட கண்டுபிடிக்க முடியாத வகையில் பணத்தை பேக்கிங் செய்துள்ளனர்.
போலீஸ் குற்றவியல் பிரிவினரும், வருமானத்துறை அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கரோல் பாக் விடுதியில் உள்ள எண். 202, 206 அறைகளில் தங்கியிருந்த மும்பையைச் சேர்ந்த அன்சாரி அன்சூர், ஃபாசல் கான், அன்சாரி அஃபான் என்பவர்களும், ராஜஸ்தானை சேர்ந்த லது ராம், மகாவீர் சிங் ஆகியோரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள். மேலும் பிடிபட்டவர்களிடம் தொலைபேசி எண்களை ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.