

சிம்லா: இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் 7 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
கடந்த நவம்பர் 12-ம் தேதி இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைத்தன.
கடந்த டிசம்பர் 11-ம் தேதி இமாச்சல பிரதேசத்தின் 15-வது முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்விந்தர் சிங் சுக்கு (58) பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக அக்னி ஹோத்ரி (60) பதவியேற்றுக் கொண்டார்.
இந்த சூழலில் இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தாணிராம், சந்திரகுமார், ஹர்ஷவர்தன் சவுகான், ஜெகத் சிங் நெகி, ரோகித் தாக்குர், அனிருத் சிங், விக்ரமாதித்ய சிங் ஆகிய 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் அக்னி ஹோத்ரி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இமாச்சல பிரதேச எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைச்சரவையில் 12 பேர்இடம்பெற முடியும். தற்போது முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என 9 பேர் அமைச்சரவையில் உள்ளனர். இமாச்சல பிரதேசத்தின் 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. எனவே அந்த மாவட்டங்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வீரபத்ர சிங்கின் மகன்
புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள விக்ரமாதித்ய சிங் மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார். முதல்வர் பதவிக்கான போட்டியின் போது தற்போதைய முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கும் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங்குக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பெரும்பான்மை எம்எல்ஏக்கள் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு ஆதரவு அளித்ததால் அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பிரதிபா சிங்கின் தீவிர ஆதரவாளர் அக்னி ஹோத்ரிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. தற்போது பிரதிபா சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.