

பண மதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் பொருளாதாரம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசம், தர்மசாலா வில் நேற்று நடந்த பொதுக் கூட்டத் தில் அவர் மேலும் பேசியதாவது: பணமில்லா பரிவர்த்தனையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. அதேநேரம் அந்த நடைமுறையை மக்களிடம் திணிக்கக்கூடாது. தற் போதைய பணமதிப்பு நீக்க நடவடிக் கையால் ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை இரண்டாகப் பிரிக்க திட்டமிட்டு செயல்படுகிறார். இதில் ஒருபக்கம் ஒரு சதவீத பணக்காரர்களும் மறுபக்கம் ஏழைகளும் நடுத்தர மக்களும் தள்ளப்படுவார்கள். ஐம்பது நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் 7 மாதங்களானால்கூட இந்தப் பிரச்சினை ஓயாது.
கறுப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாஜக அரசு கூறுகிறது. கறுப்புப் பணத்தில் 6 சதவீதம் மட்டுமே ரொக்கமாக உள்ளது. 94 சதவீத கறுப்புப் பணம் நிலம், தங்கம், வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.