

கொல்கத்தா: மேற்குவங்க முதல் கட்ட தேர்தலில் 92.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தச் சூழலில் முதல் கட்டமாக 152 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்ளனர். அவர்களுக்காக 44,376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குரிமையை செலுத்தினர்.
மேற்கு வங்கத்தின் அசன்சோல் தக்சின் தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியின் பாஜக எம்எல்ஏ.வாக அக்னிமித்ரா பால் பதவி வகிக்கிறார். தற்போதைய தேர்தலில் பாஜக சார்பில் அவரே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திரிணமூல் சார்பில் தபஸ் பானர்ஜி களமிறங்கி உள்ளார்.
இந்தச் சூழலில் அசன்சோல் தொகுதியின் ஹர்மத் நகர் பகுதியில் பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பால் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை குறிவைத்து கற்கள் வீசப்பட்டன. இதில் காரின் கண்ணாடிகள் உடைந்தன. இதுதொடர்பாக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். மால்டாவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாஜக ஏஜென்ட் ஒருவர் தாக்கப்பட்டார்.
அவரது கார் சேதப்படுத்தப்பட்டது. படுகாயமடைந்த பாஜக ஏஜென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல பதாஸ்பூர் வாக்குச்சாவடியில் பிரான்கிருஷ்ணா சாகு என்ற பாஜக ஏஜென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாராயண்கர் தொகுதிக்கு உட்பட்ட பாசிம் மேதினிபூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒரு வாக்காளருக்கும் வாக்குச்சாவடி பெண் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாக்காளர், பெண் அதிகாரியை சரமாரியாக தாக்கினார்.
வீரர்கள் மீது கல்வீச்சு
பிர்பூம் மாவட்டம், கைரோ சோல் பகுதி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடியை வாக்காளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது சிஆர்பிஎப் போலீஸாரை குறிவைத்து சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
முதல் கட்ட வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நேற்று 700-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டன. வன்முறை சம்பவங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக இந்த புகார்கள் அளிக்கப்பட்டன. வாக்காளர்களைத் தாக்கியது, கட்சி சார்பில் அமைக்கப்பட்ட பந்தல்களை உடைத்தது தொடர்பாக சிஆர்பிஎப் போலீஸார் மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
முதல்கட்ட தேர்தலில் 92.03 சதவீத வாக்குகள் பதிவாகி யுள்ளன. வரும் 29-ம் தேதி மீதமுள்ள 142 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்குவங்கத்தின் 2 கட்டத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன.