மேற்கு வங்க தேர்தலில் 92% வாக்குப்பதிவு உணர்த்துவது என்ன?

மேற்கு வங்க தேர்தலில் 92% வாக்குப்பதிவு உணர்த்துவது என்ன?
Updated on
2 min read

புதுடெல்லி: முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) தொடர்ந்து 3-வது முறையாக மேற்கு வங்கத்தை ஆள்கிறது. இம்மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 294 இடங்களில் 152-க்கான முதல்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. முதல்கட்ட தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 92% வாக்குகள் பதிவானதன் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த கூடுதல் வாக்குப் பதிவு எதை உணர்த்துகிறது? இந்திய தேர்தல் நடைமுறையில் இது ஒரு புதிய மாற்றமா? முன்பு 50 முதல் 55% வாக்குப் பதிவை கொண்டே ஆட்சிகள் அமைந்தன. ஆனால், இன்று, 92% வாக்குகள் பதிவானதற்கு என்ன காரணம்? மக்கள் தங்கள் வாக்குரிமை குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனரா போன்ற கேள்விகள் எழுகின்றன.

மேற்கு வங்கத்தில் முதல்வர் ஜோதி பாசுவின் பதவி விலகலுக்குப் பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா நவ. 6, 2000 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து 2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 75.3% வாக்குகள் பதிவாகின. அப்போது புத்ததேவ் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 199 தொகுதிகளுடன் ஆட்சி அமைத்தது. இது இடதுசாரி கூட்டணியின் 6-வது தொடர் வெற்றியாக அமைந்தது. எதிர்க்கட்சிகள் மொத்தம் 86 இடங்களில் வென்றன. 2006 தேர்தலிலும் புத்ததேவ் ஆட்சி அமைந்தது.

அடுத்து, 2011 தேர்தலில் வாக்குப் பதிவு 84.3% ஆக உயர்ந்ததில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 34 ஆண்டு கால இடதுசாரிகளின் ஆட்சிக்கு டிஎம்சி தலைவர் மம்தா முற்றுப்புள்ளி வைத்தார். இதில் டிஎம்சி 184 தொகுதியில் வென்றது முதல்வராக முதல் முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றார்.

மீண்டும் 2016 தேர்தலில், டிஎம்சி 2-வது முறையாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வரானார். டிஎம்சி-க்கு 211 தொகுதிகளுடன் 44.91% வாக்குகள் கிடைத்தன.

அடுத்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப் பதிவு 81.6% ஆக குறைந்தது. இதில் 215 தொகுதிகளுடன் 48.02% வாக்குகள் பெற்ற முதல்வர் மம்தாவின் டிஎம்சி ஆட்சி 3-வது முறை தொடர்கிறது.

ஆனால் முதன்முறையாக பாஜக 77 இடங்களை கைப்பற்றி முக்கிய எதிர்க்கட்சியானது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளால் ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் தற்போதைய தேர்தலின் முதல்கட்டத்திலேயே 92.6% வாக்குகள் பதிவாகி உள்ளன. மேற்குவங்க தேர்தல் வரலாற்றின்படி இயல்பாகவே, அதிக அளவு வாக்களிப்பு என்பது ஆட்சி மாற்றத்தை குறிக்கிறது. எனினும் இந்த கூடுதல் வாக்குப்பதிவுக்கு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 84 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதும் காரணமாக கூறப்படுகிறது.

எனவே, வாக்களிக்கவில்லை எனில் குடியுரிமையை இழந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாகவும் வாக்குகள் அதிக அளவில் பதிவாகி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து எழுந்துள்ளது.

இத்துடன், அதே ஆட்சி தொடர்வதை அல்லது மாறுவதையோ விட, இந்தியாவின் தேர்தல் செயல்முறை காலப்போக்கில் மிக வேகமாக மேம்பட்டு வருவதையும் கூடுதல் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு காலத்தில், 50% முதல் 55% வாக்குப் பதிவே சிறப்பான தேர்தலாக கருதப்பட்டது. தற்போது இறந்தவர் பெயரை பயன்படுத்தி போலி வாக்குகள் பதிவு செய்வது, ஒருவர் பல மாநிலங்களில் பெற்ற ஓட்டுரிமை மற்றும் அண்டை நாடுகளின் போலி வாக்காளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் அது கடந்த தேர்தல்களை விடக் குறைவு. எனவே, இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும் முடிந்து மே 4-ல் வெளியாகும் முடிவுகளே வாக்குப்பதிவு உயர்வுக்கான உண்மை காரணத்தை விளக்கும்.

மேற்கு வங்க தேர்தலில் 92% வாக்குப்பதிவு உணர்த்துவது என்ன?
முதல்கட்ட தேர்தல் நடந்த 152 இடத்தில் 110 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்: அமித் ஷா நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in