

புதுடெல்லி: வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் காலை வேளைகளில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக காலையில் பனிப்பொழிவு கூடுதலாக இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்க வேண்டிய நிலை உள்ளது. பலர், நெருப்பு மூட்டி அனலில் குளிர்காய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.
கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியின் பிரதான சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. டெல்லி அருகில் உள்ள தன்கார் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக இன்று அதிகாலை விபத்து நேரிட்டது. 60 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கவுதம் புத்தா நகர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மேலும் சில நாட்களுக்கு அடர் பனி நீடிக்கும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அடர் பனி அதிகம் இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இத்தகைய நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்காது என்பதால் சாலைப் பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது. அடர் பனி காரணமாக காற்றின் தரம் இன்று அதிகாலை 378 என்ற அளவில் இருந்ததாகவும், இது மிகவும் மோசமான நிலை என்றும் SAFAR என்ற காற்று தரக்குறியீட்டை வெளியிடும் நிறுவனம் தெரிவித்துள்ளது.