Published : 11 Dec 2022 06:54 AM
Last Updated : 11 Dec 2022 06:54 AM
சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு (58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் காங்கிரஸ் அரசு இன்று பதவியேற்கிறது.
இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு 25 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சிம்லாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் புதிய முதல்வரை தேர்வு செய்ய கட்சித் தலைமைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவராக உள்ளார். அந்த மாநில காங்கிரஸ் தேர்தல் பிரச்சார குழு தலைவராக சுக்விந்தர் சிங் சுகு செயல்பட்டார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முகேஷ் அக்னிஹோத்ரி இருந்தார். இவர்கள் 3 பேரும் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும் சிலரும் முதல்வர் பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் அனைத்து தரப்பினருடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். எம்எல்ஏக்களிடமும் தனித்தனியாக கருத்து கேட்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “புதிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர்: பிரதிபா சிங்கின் தீவிர ஆதரவாளரான முகேஷ் அக்னி ஹோத்ரி துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். சிம்லாவில் இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இதில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் அரசு பதவியேற்கிறது. இதுகுறித்து பிரதிபா சிங் நேற்று கூறும்போது, “கட்சித் தலைமையின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT