

மேற்கு வங்க சுங்கச் சாவடிகளில் ராணுவம் நிறுத்தப்பட்டதற்கு எதிராக மாநில முதல்வர் மம்தா போர்க்கொடி தூக்கியுள்ளார். வாகனங்களிடம் வீரர்கள் பணம் வசூலித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
சுங்கச் சாவடிகளில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறக் கோரி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகை முன் நேற்று முன்தினம் ஆர்பாட்டம் நடத்தினர். ஆளுநர் திரிபாதி அப்போது ஊரில் இல்லாததால் அவரை இவர்கள் சந்திக்க முடியவில்லை.
இந்த விவகாரம் குறித்து திரிபாதி நேற்று கூறும்போது, “ராணுவத்துக்கு எதிராக குற்றம் சாட்டுவதற்கு முன் ஒருவர் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண் டும். ராணுவத்தின் மீது களங்கம் கற்பிக்கக் கூடாது” என்றார்.
திரிபாதியின் கருத்து குறித்து மம்தா நேற்று கூறும்போது, “ஆளுநரின் கருத்து துரதிருஷ்டவச மானது. மத்திய அரசின் குரலில் அவர் பேசுகிறார். சுமார் 8 நாட்களாக அவர் கொல்கத்தாவில் இல்லை” என்றார்.