ராகிங்கில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் படுகாயம்: அசாமில் 5 பேர் கைது

பாதிக்கப்பட்ட அசாம் மாணவர் (உள்படம்)
பாதிக்கப்பட்ட அசாம் மாணவர் (உள்படம்)
Updated on
1 min read

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ராகிங் காரணமாக மாணவர் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலம் திப்ருகர் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பிரிவு மாணவர் ஆனந்த் சர்மா. இவரை மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார். ஆனந்த் சர்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், முன்னாள் மாணவர் ஒருவர், இந்நாள் மாணவர்கள் 4 பேர் என ஐந்து மாணவர்களை கைது செய்துள்ளனர். ஆனந்த் சர்மா தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஹேமந்த பிஸ்வாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "திப்ருகர் பல்கலைக்கழக மாணவர் ரேக்கிங் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வந்துள்ளது. இந்த வழக்கை மாவட்ட நிர்வாகம் அதிக கவனத்துடன் கையாளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆனந்த சர்மாவுடன் படித்த சக மாணவர்கள் இருவரும் சம்பவத்தன்று ராகிங் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பல்கலைக்கழகத்தின் ராகிங் தடுப்பு செயற்குழு இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார் அளித்த புகாரில், "எனது மகன் நீண்ட காலமாகவே சீனியர்களின் ராகிங் தொல்லைக்கு ஆளாகிவந்தார். அவர் என்னிடம் சீனியர் மாணவர்கள் தன் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். தன் செல்போனை பறித்துக் கொள்கின்றனர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர் என்று என்னிடம் புலம்பினார். என் மகனின் கையில் கஞ்சா மற்றும் மது பாட்டில்களை திணித்து புகைப்படம் எடுத்து எதிர்காலத்தில் தங்களின் தற்காப்புக்காக மிரட்ட பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த 4 மாதங்களாகவே சீனியர் மாணவர்கள் பற்றி அவர் தொடர்ந்து புகார் கூறி வந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் அசாமில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in