

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ரேகா குப்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
எனினும், தீ விபத்தில் முதல் தளம், 2-வது, 3-வது தளங்களில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடங்குவர். மேலும் 15 பேர் மீட்கப்பட்டனர் என்று தீயணைப்பு அதிகாரி முகேஷ் வர்மா தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”தீயில் 9 பேர் உயிரிழந்தது என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இந்த சோகமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களுக்கு மன வலிமையை தர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என கூறியுள்ளார்.
ஷதாரா தொகுதி பாஜக எம்எல்ஏ சஞ்சய் கோயலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.