

டோக்கியோவில் ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் இன்று (வியாழக்கிழமை) இந்தியாவில் இருந்து ஜப்பான் கிளம்பியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், "கிழக்கு நோக்கிய பயணம் தொடங்கியிருக்கிறது. இந்த முறை ஜப்பானின் இருதரப்பு உச்சி மாநாட்டுக்காக பிரதமர் மோடி, டோக்கியோவை நோக்கிப் புறப்பட்டார்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக பயணம் குறித்து நேற்று (புதன்கிழமை) பேசிய மோடி, '' இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களுக்காக ஜப்பானுடனான ஒத்துழைப்பு இந்த உச்சி மாநாட்டின் மூலம் விரைவுபடுத்தப்படும்.
இதன்மூலம் வணிக வாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் அதிகரிப்பதோடு, திறன்மிகு வேலைவாய்ப்புகளும் உருவாகும். 'மேக் இன் இந்தியா' திட்டமும் ஊக்கமடையும்.
இன்று, இந்தியாவின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் ஜப்பான் ஒன்றாகத் திகழ்கிறது. பல்லாண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தின் ஆற்றல் வளங்களாக ஜப்பானிய நிறுவனங்கள் இருக்கின்றன.
டோக்கியோவில், இந்திய மற்றும் ஜப்பானிய உயர்மட்ட வணிகத் தலைவர்களிடம் விரிவாகப் பேச இருக்கிறேன். இதன்மூலம் நம்முடைய வாணிப மற்றும் முதலீடு உறவுகள் வளரும்'' என்று கூறியிருந்தார்.
பிரதமரான பிறகு மோடி ஜப்பானுக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.