

ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ. 4,700 கோடி மதிப்பிலான, 23,500 கிலோ போதை மாத்திரைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக, பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியத் தலைவர் நஜிப் ஷா டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியதாவது:
தடை செய்யப்பட்ட மாண்ட் ராக்ஸ் போதை மாத்திரைகள், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அதிக அளவில் தயார் செய் யப்பட்டு, பதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் மும்பை பிரிவு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், உதய் பூரில் உள்ள ‘மருதர் ட்ரிங்க்ஸ்’ என்ற நிறுவனத்தின் வளாகத்தில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 28-ம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அங்கிருந்த கிடங்கில், ஓர் அறை முழுவதும், மாண்ட்ரிக்ஸ் மாத்திரைகள் குவிக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 2 கோடி மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இவற்றின் மொத்த எடை, 23.5 டன்.
இவை தென்னாப்பிரிக்கா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பதுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் போதை மாத்திரைகள் வெகுவாக புழக்கத்தில் உள்ளன. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், இளைஞர்கள் ‘பார்ட்டி’க்களின் போது, இதனை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர்.
உயிரைக் கொல்லும் மிகவும் ஆபத்தான இந்த மாண்ட்ரிக்ஸ் மாத்திரைகளுக்குத் தேவைப்படும் பிரதான மூலப்பொருளான அசிடிக் அன்ஹைட்ரைட் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு முக்கிய மூளையாக செயல்பட்ட நபரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வருவாய் புலனாய்வு இயக் குனரக தலைவர் ஜெயந்த் மிஸ்ரா இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் இதுவரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியதிலேயே இதுதான் மிகவும் பெரியது. அநேகமாக, உலகிலேயே 23,000 கிலோ போதை மாத்திரை ஒரே நேரத்தில் பிடிபட்டது இதுவாக இருக்கக்கூடும். இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு, ரூ.4,500 கோடி முதல் 4,700 கோடி வரை இருக்கும்.
‘எல்லை பாதுகாப்புப் படை யினரின் உதவியுடன் நடத்திய இந்த வேட்டையில் பலர் சிக்குவார்கள். தற்போது இது தொடர்பாக, பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுபாஷ் துதானியை மும்பையில் கடந்த 29-ம் தேதி கைது செய்துள்ளோம்’ என்றார்.