

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் மருத்துவமனை கட்ட கடந்த 2020-ல் முடிவு செய்யப்பட்டது. அந்த மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கப்படாத நிலையில் சுமார் 87 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது இப்போது பேசுபொருளாகி உள்ளது.
இந்தூரில் உள்ள கஜ்ரானா பகுதியில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நூறு படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்தது. இது தொடர்பான உத்தரவை கடந்த 2020-ல் பிறப்பித்தது.
இந்த சூழலில் அந்த மருத்துவமனைக்கு இன்னும் நிலம் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், அதில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் என பல்வேறு மருத்துவ பணிகளுக்கான 87 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் வரை பணியாளர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. கஜ்ரானா பகுதி நகரப்பகுதியாக உள்ளது என்று தலைமை மருத்துவ அதிகாரி மாதவ் ஹசானி கூறியுள்ளனர். இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் வரையில் அதில் பணியாற்ற தேர்வான ஊழியர்கள் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சஞ்சீவினி கிளினிக்கில் பணியாற்றுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அம்மாநிலத்தின் துணை முதல்வரும், சுகாதார துறை அமைச்சருமான ராஜேந்திர ஷுக்லாவும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாக தொடங்கி, 50+ படுக்கையறைகள் கொண்ட மருத்துவமனை, அதன் பின்னர் 100 படுக்கையறைகள் கொண்ட மருத்துவமனையாக உயர்த்த திட்டமிடப்பட்டது. அதற்கு தகுதியான அரசு நிலம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது மிகப் பெரிய மோசடி என்று ஆளும் தரப்பு மீது காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. கஜ்ரானா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வசித்து வரும் மக்கள் இந்தூரில் பிற மருத்துவமனைகளை தங்களது மருத்துவ தேவைக்காக நாடும் சூழல் நிலவுகிறது.