

இந்தியா - அமெரிக்கா தொழில் கவுன்சிலின் உச்சி மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து, உலகளவில் பண வீக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 7 சதவீதத்தைக் கடந்தது. ரிசர்வ் வங்கி இந்தியாவில் பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால், இந்தியாவில் பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டியது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் மேற்கொண்டன. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் பணவீக்கம் 6.7 சதவீதமாக குறைந்தது.
வருவாய் பகிர்வு
பணவீக்கம் இந்தியாவின் முன்னுரிமை இல்லை. இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். கடந்த சில மாதங்களாக பண வீக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம். பணவீக்கத்தைக் காட்டிலும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி தரவும், வருவாய் பகிர்வும்தான் எங்கள் முன்னுரிமையாக உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
ஜி-20 உச்சி மாநாடு குறித்து அவர் கூறுகையில், “இந்தியா சவாலான ஒரு கால கட்டத்தில் ஜி-20 மாநாட்டுக்கு தலைமை ஏற்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள், அடுத்த 60 ஆண்டுகளுக்கு உலகின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. வளரும் நாடுகளில் உலகம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடன்...
இந்தியாவில் அந்நிய முதலீடு களுக்கான வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், “ஓஎன்டிசி இந்திய சில்லரைத் துறையையும் உற்பத்தித் துறையையும் மாற்றி அமைக்கிறது. டிஜிட்டல் துறையில் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன” என்று அவர் தெரிவித்தார்.
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா குறித்து அவர் கூறுகை யில், “தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தற்போதைய கால கட்டத்துக்கு ஏற்ப தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். விரைவிலேயே அந்த மசோதா வெளியாகும்” என்று தெரிவித்தார்.