

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில், காலனித்துவ காலத்திலிருந்த கடற்படை கொடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை குறிக்கும் வகையில், புதிய கடற்படைக் கொடியை வெளியிட்ட பிரதமர், இதனை சத்ரபதி சிவாஜிக்கு அர்ப்பணித்து, ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “வரலாற்றில் இன்று செப்டம்பர் 02, 2022 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அடிமைத்தனத்தின் அடிச்சுவட்டை இந்தியா அகற்றுவதை நன்கு உணர்கிறோம். இந்திய கப்பற்படைக்கு இன்று புதிய கொடி கிடைத்துள்ளது. இந்திய கடற்படையின் கொடியில் இதுவரை அடிமைத்தனத்தின் அடையாளம் இருந்தது. ஆனால் இன்று முதல் சத்ரபதி சிவாஜியின் உத்வேகத்தால் புதிய கடற்படைக் கொடி கடலிலும், வானிலும் பறக்கும்” என்றார்.
இந்தியக் கடற்படை கொடியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வெள்ளைக் கொடியில் தேசியக் கொடி, அசோக சின்னம் மற்றும் நங்கூரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. அதோடு கடற்படையின் மோட்டோவும் தேவநாகிரி மொழியில் இடம் பெற்றுள்ளது. எண்கோண வடிவில் எட்டு திசைகளில் குறிக்கும் வகையில் இதன் சின்னம் உள்ளது. 1950-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடற்படை கொடியில் 4-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.