

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆறுக்கும் மேற்பட்ட மாநில ஆளுநர்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. அந்த மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்க பாஜக மூத்த தலைவர்களின் பட்டியலை நரேந்திர மோடி அரசு தயாரித்து வருவதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியபோது, ‘இதுவரை இருந்ததுபோல் அனைத்து மாநில ஆளுநர்களையும் மாற்றுவது கைவிடப்பட்டுள்ளது, சில மாதங்களில் பதவிக்காலத்தை முடிக்கும் ஆளுநர்களுக்கு நீட்டிப்பு அளிக்கப் போவதில்லை. முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா, வி.கே.மல்ஹோத்ரா, பி.சி.கந்தூரி, சாந்தகுமார், உத்தரப் பிரதேச பாஜக தலைவர்களான கல்யாண்சிங், லால்ஜி டாண்டன், கேசரிநாத் திரிபாதி மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் ஆகியோர் பெயர்கள் புதிய ஆளுநர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன’ எனத் தெரிவித்தன.
பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அதன் ஆளுநர் டி.ஒய்.பாட்டீல் மாற்றப்படுவார் எனவும் கேரள ஆளுநரான ஷீலா தீட்சித், பஞ்சாபின் சிவராஜ் பாட்டீல், ஜம்மு-காஷ்மீரின் எம்.என்.வோரா மற்றும் அசாமின் ஜானகி வல்லப் பட்நாயக் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் மாற்றமா?
மோடியின் ஆட்சியில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவின் பதவிக்கு ஆபத்து இல்லை எனக் கருதப்படுகிறது.
இவருக்கு தற்போது தமிழக முதல்வருடன் இணக்கமான சூழல் நிலவுவதால் அவரது பதவிக்காலம் நிறைவடையும் 2016 ஆகஸ்ட் வரை பதவியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் டெல்லியில் பிரதமரைச் சந்தித்த முதல்வர் ஜெயலலிதாவும் ஆளுநர் மாற்றலுக்கு வலியுறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.