

பிஹார் பத்திரிகையாளர் ராஜ்தேவ் ரஞ்சன் கொலை வழக்கு விசாரணைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு சிபிஐ-க்கு தெரிவிக்கும் போது, “குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற காரணம் காட்டி குற்றம்சாட்டப்பட்ட எந்த ஒருவரும் ஜாமீன் கேட்கக் கூடாது என்பதில் சிபிஐ தெளிவாக இருக்க வேண்டும்” என்று கூறினர்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாகியுள்ள மொகமது கயீஃப் மற்றும் மொகமது ஜாவேத் ஆகியோரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதா என்று சிவான் அமர்வு நீதிமன்ற நீதிபதியிடமிருந்து அறிக்கையையும் நீதிமன்றம் கோரியுள்ளது. இவர்கள் பிஹார் சுகாதார அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் சர்ச்சைக்குரிய ராஷ்ட்ரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ஷஹாபுதின் ஆகியோருடன் அன்றைய தினம் இருந்ததாக செய்திகள் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவானில் பிஹா சுகாதார அமைச்சரை இவர்கள் சந்திக்கும் போது தேடப்படும் குற்றவாளியாக இவர்கள் அறிவிக்கப்படவில்லை என்று பிஹார் அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெளிவுபடுத்தியது.
கொலையுண்ட பத்திரிகையாளர் ரஞ்சனின் மனைவி ஆஷா ரஞ்சன் செப்டம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கூறியபோது அரசியல் செல்வாக்கு மற்றும் ஷஹாபுதின் மீதான அச்சம் காரணமாக இன்னும் கொலை தொடர்பான விசாரணையே தொடங்கப்படவில்லை என்று கூறினார்.
இதனையடுத்து பத்திரிகையாளர் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.