கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குவதை உறுதி செய்க: மத்திய அரசு

கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குவதை உறுதி செய்க: மத்திய அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், 15-வது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வழியாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கலந்துரையாடினார். அப்போது அவர், கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கலந்துகொண்டார்.

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ், டெல்லி துணை முதல்வரும், சுகாதார அமைச்சருமான மணிஷ் சிசோடியா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி உட்பட பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், "நாடு முழுவதும் பல அடுக்கு சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கி, விரிவுபடுத்தி, வலுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கூட்டுறவு ஒத்துழைப்பு உணர்வுடன், மத்திய அரசு பணியாற்றி வருகிறது. பெருந்தொற்று நமக்கு சுகாதார உள்கட்டமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துள்ளது.

மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மத்திய அரசு நிதியை, சில மாநிலங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பது குறித்து கவலை அளிக்கிறது. அத்தகையை மாநிலங்களை மத்திய அரசு ஆய்வு செய்து நிதியை அதிகளவில் பயன்படுத்த வலியுறுத்தும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in