Published : 07 Aug 2022 06:03 AM
Last Updated : 07 Aug 2022 06:03 AM
புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வகை பயிர்களை பயிரிடுதல், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் மற்றும் இதர விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடைதல், தேசிய கல்வி கொள்கை மற்றும்நகர்ப்புற நிர்வாகத்தை அமல்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும். ஒவ்வொரு கொள்கைக்கான செயல் திட்டத்தையும் இறுதி செய்வதற்கான முயற்சிகள் இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். இந்த கூட்டத்தின் ஒருபகுதியாக, தலைமை செயலாளர்களின் மாநாடு தர்மசாலாவில் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.
நிதி ஆயோக்கின் இந்த நிர்வாக கவுன்சில் கூட்டம் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் புதிய சகாப்தத்துக்கு வழிவகுக்கும்.
இந்நிலையில், மத்திய அரசை விமர்சித்து வரும் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஆனால், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சந்திரசேகர ராவ் நேற்று கூறும்போது, ‘‘பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையேற்றம், டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பல விஷயங்களில் நிதி ஆயோக் அமைப்பு எதுவும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும். மத்திய அரசு அளிக்கும் நிதி நேரடியாக மாநிலங்களுக்கு தரப்படுவதில்லை. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. எனவே, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து என் எதிர்ப்பை தெரிவிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும்இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முதல்வர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT