Published : 22 Jul 2022 07:04 AM
Last Updated : 22 Jul 2022 07:04 AM

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

கொல்கத்தா: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்வரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். இதில் ஜெகதீப் தன்வர், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் தீவிர ரசிகர் என்றுகூறப்படுகிறது. அதனால், மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல் செய்த போது திரிணமூல் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதற்கிடையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்வருக்கு மம்தா ஆதரவளிப்பார் என்று கணிக்கப்பட்டது.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித்பானர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களில் யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது குறித்த கேள்வியே எழவில்லை. இரு அவைகளிலும் 35 எம்.பி.க்கள் உள்ள ஒரு கட்சியுடன் முறையான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் இல்லாமல் எதிர்க்கட்சி வேட்பாளரை முடிவு செய்த விதம் காரணமாக வாக்கெடுப்பில் இருந்து விலகி யிருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்” என்றார்.

தியாகிகள் தினம்: கடந்த 1993-ம் ஆண்டு மம்தா பானர்ஜி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது பேரணி ஒன்றில் போலீஸார் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21-ம் தேதியை தியாகிகள் தினமாக மம்தா அனுசரித்து வருகிறார். காங்கிரஸை விட்டுப் பிரிந்துதிரிணமூல் காங்கிரஸை மம்தா உருவாக்கினாலும் தியாகி கள் தினம் அனுசரிப்பதை நிறுத்தவில்லை.

இந்நிலையில், தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் திரிணமூல் தொண்டர்களின் பிரம்மாண்ட கூட்டத்தில் மம்தா பானர்ஜி நேற்று பேசியதாவது: ராணுவத்துக்கு மாற்று இல்லை. ராணுவத்துடன் பாஜக அரசு விளையாட வேண்டாம். மக்களை நேரடியாகராணுவத்தில் சேருங்கள். அக்னி பாதை திட்டத்தை கைவிடுங்கள்.

அரிசிக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அரிசி, இனிப்புகள், லஸ்ஸி, தயிர் என எல்லாவற்றுக்கும் வரி விதித்தால் மக்கள் என்ன சாப்பிடுவது? மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தபோது கட்சி உறுப்பினர்களின் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது. பிறப்பு சான்றிதழ்களிலும் அவர்கள் முறைகேடுகளை செய்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநில அரசுகளையும் பாஜக உடைக்க முயற்சிக்கிறது. மகாராஷ்டிராவை தொடர்ந்து மேற்கு வங்கத்தை குறிவைக்கப் போவதாக பாஜகவினர் கூறுகின்ற னர். மேற்கு வங்க அரசை உடைக்க பாஜக துணிய வேண்டாம். ராயல் பெங்கால் புலி இங்குள்ளது. ஜாக்கிரதையாக இருங்கள்.

மேற்கு வங்கத்துக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை பாஜகநிறுத்தினால் நாங்கள் ரயிலில்டெல்லிக்கு சென்று பாஜக ஆட்சியாளர்களை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x