குடியரசுத் தலைவர் தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 39 எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து உத்தவ் பதவி விலகினார். பின்னர் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.

சிவசேனாவுக்கு 19 மக்களவை எம்.பி.க்களும் 3 மாநிலங்களவை எம்.பி.க்களும் உள்ளனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 16 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஷிண்டே ஆதரவு எம்.பி.க்கள் 6 பேர் பங்கேற்கவில்லை.

இதில் பெரும்பாலான எம்.பி.க்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பெண் திரவுபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவை ஆதரிக்க உத்தவ் தாக்கரே நேற்று ஒப்புக்கொண்டார்.

இதற்கு முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது உத்தவ் நிலைப்பாடாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in