சிறையில் உள்ள மனைவி இந்திராணிக்கு கணவர் பீட்டர் முகர்ஜி எழுதிய காதல் கடிதம்

சிறையில் உள்ள மனைவி இந்திராணிக்கு கணவர் பீட்டர் முகர்ஜி எழுதிய காதல் கடிதம்
Updated on
1 min read

மகள் ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணிக்கு, கணவர் பீட்டர் முகர்ஜி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து காதல் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் கடந்த 2012-ம் ஆண்டு ஷீனா போரா என்ற இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டார். இது 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஷீனாவின் தாய் இந்திராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலையில் தனக்கு தொடர்பில்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று பீட்டர் 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் மனைவி இந்திராணிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பீட்டர் முகர்ஜி கைப்பட எழுதிய கடிதம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பைகுல்லா சிறையில் உள்ள இந்திராணிக்கு கடந்த ஜனவரி 3-ம் தேதி பீட்டர் எழுதியுள்ள அந்த ஒரு பக்க கடிதம், ‘‘முமூ, மை டியர், ஷீனா கொலை வழக்கில் குற்றம் அற்றவள் என்று நீ நிரூபித்து, வழக்கில் இருந்து விடுபட நான் பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று தொடங்குகிறது.

‘‘நாம் சந்தித்ததில் இருந்து, உன் பிறந்த நாளை நாம் இருவரும் ஒன்றாக கழித்துள்ளோம். ஆனால், நாம் இருவரும் மிக அருகில் இருந்தும் மிக தூரத்தில் இருக்கிறோம் (இருவரும் சிறையில் இருப்பதால்). கடவுள் மிகவும் சிறந்தவர். ரோமியோ ஜூலியட் போல நாம் இருவரும் ஒரு நாள் நீதிமன்றத்திலோ அல்லது வீட்டிலோ விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன். இந்த கடிதம் உனக்கு கிடைக்கும், மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி தரும் என்று நம்புகிறேன்’’ என்று பீட்டர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

‘‘இன்றைக்கு இதுதான் குறுந்தகவல். உண்மையான பிறந்த நாள் என்பது உன்னை தொட்டு, அணைத்து முத்தம் கொடுக்கும் நாள்தான்’’ என்று பீட்டர் கடிதத்தில் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in