Published : 22 Jun 2022 04:01 AM
Last Updated : 22 Jun 2022 04:01 AM
மும்பை: சிவசேனா கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, 21 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குஜராத்தில் முகாமிட்டுள்ளதால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்துவந்தார்.
கடந்த திங்கட்கிழமை நடந்த சட்ட மேலவைத் தேர்தலில் சிவசேனா கட்சியின் 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் ஆதரவு பெற்ற தலித் தலைவரான சந்திரகாந்த் ஹன்டோர் தோல்வியடைந்தார். 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தது சிவசேனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான சிவசேனாவின் 21 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றுவிட்டார். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிருப்தி எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த 22 பேரைத் தவிர, மேலும் சில எம்எல்ஏக்களும் சிவசேனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும் அது வெற்றி பெறாது என்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று மதியம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து சிவசேனா கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் பதவியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டார். அந்தப் பதவியில் சேவ்ரி தொகுதி சிவசேனா எம்எல்ஏ அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் சிந்தனைகளுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். பால் தாக்கரே இந்துத்துவாவை எங்களுக்கு கற்பித்துவிட்டு சென்றுள்ளார். அதிகாரத்துக்காக பால் தாக்கரேவின் சிந்தனைகளுக்கு துரோகம் செய்ய மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.
ஆளும் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவேளை சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 288. ஒருவர் இறந்துவிட்டதால் தற்போது 287 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் மெஜாரிட்டி பெற 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆட்சி அமைக்க இந்த 114 எம்எல்ஏக்களுடன் மேலும் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஏக்நாத் ஷிண்டேவையும் சேர்ந்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேர் உள்ளனர். சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சேர்த்தால் 25 பேர் உள்ளனர். மெஜாரிட்டிக்கு இன்னும் 5 எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு தேவை. அதனால், மேலும் சில அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறும்போது, “சிவசேனாவில் ஏற்பட்டுள்ள குழப்பம் அவர்களது உள்கட்சி பிரச்சினை. இதில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்று இப்போதே கூற முடியாது. அரசியலில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். ஆளும் கூட்டணி அரசு கவிழ்ந்தால் நாங்கள் ஆட்சி அமைப்பது பற்றி சிந்திப்போம்” என்றார். இதனிடையே, மகாராஷ்டிராவின் ஜலகான் தொகுதி பாஜக எம்எல்ஏ சஞ்சய் குடே, சூரத் ஓட்டலில் தங்கியிருக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை நேற்று சந்தித்துப் பேசினார்.
ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். உத்தவ் வீட்டில் நடந்த ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவான், பாலாசாகேப் தோரட், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவாரும் உத்தவ் தாக்கரேவை நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
ஷிண்டே நிபந்தனை
இதனிடையே, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் மிலிந்த் நர்வேகர், ரவீந்திர பதக் ஆகியோர் நேற்று சூரத் சென்று ஏக்நாத் ஷிண்டேவையும் அதிருப்தி எம்எல்ஏக்களையும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நடந்தது. அப்போது, ஷிண்டேவிடம் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் 10 நிமிடம் பேசியுள்ளார்.
தன்னை சந்தித்த தலைவர்களிடம், தனக்கு 35 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் பாஜகவுடன் சிவ\சேனா கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிவசேனா பிளவுபடாது என்றும் ஷிண்டே கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT