Published : 12 Jun 2022 04:35 AM
Last Updated : 12 Jun 2022 04:35 AM
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாததை வெளிச்சம் போட்டுக் காட்டின.
இந்த சூழ்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உட்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கிவிட்டது. அனைத்து பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர்களும் கூடி, நம் நாட்டு அரசியலின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கு குடியரசுத் தலைவர் தேர்தல் சரியான ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில், நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தலைவரை தேர்ந்தெடுக்கும் பொன்னான வாய்ப்பை எம்.பி. எம்எல்ஏ-க்களுக்கு இந்த தேர்தல் வழங்குகிறது. நமது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் நிலையில், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
எனவே, வரும் 15-ம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
நாட்டில் உள்ள எம்.பி. எம்எல்ஏ-க்களின் ஒட்டு மொத்த வாக்கு மதிப்பு 10.86 லட்சம் ஆகும். இதில் பாஜக தலைமையிலான கூட்டணியின் வாக்கு மதிப்பு 48 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட் டுள்ளது.
இதுதவிர, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சிகளும் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT