Last Updated : 20 May, 2022 07:08 AM

4  

Published : 20 May 2022 07:08 AM
Last Updated : 20 May 2022 07:08 AM

கர்நாடக பள்ளி பாடநூலில் பெரியார், நாராயணகுரு பகத்சிங் குறித்த பாடங்கள் நீக்கம்: அமைச்சர் விளக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 2022- 23-ம் கல்வி ஆண்டிற்காக வழங்கப்பட்ட 7 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூகவியல் பாடநூல்கள் மாற்றப்பட்டுள்ளன. முன்பு இடம்பெற்றிருந்த சீர்த்திருத்தவாதி நாராயணகுரு, சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங், திராவிடர் இயக்க சிந்தனையாளர் பெரியார் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன தலைவரான கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் உரை பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பகத்சிங் பற்றிய பாடம் நீக்கப்பட்டதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறும்போது, “பகத்சிங்கின் வாழ்க்கைவரலாற்றை நீக்கிவிட்டு ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவர் குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. சமூகவியல் பாட நூலில் விஷம கருத்துக்களை திணிப்பதை ஏற்க முடியாது. இன்று பகத்சிங் பற்றிய பாடத்தைநீக்கிய இவர்கள், நாளை காந்தியின் பாடத்தையும் நீக்குவார்கள்”என்றார்.

இதுகுறித்து கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறும்போது, “சமூகவியல் பாடநூலை திருத்தி அமைப்பதற்காக கல்வியாளர் ரோகித் சக்ரதீர்த்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சில திருத்தங்களை பரிந்துரை செய்துள்ளது. நூல் அச்சிடும் பணி முடிவடையாத நிலையில், சர்ச்சையை உருவாக்குவது சரி அல்ல” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x