

இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1920-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த 102 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) மசோதாவை தற்போதைய பாஜக அரசு வரையறுத்தது. கடந்த மார்ச் இறுதியில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது.சிறைத்தண்டனை கைதிகள் அடையாள சட்டம் 1920-க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்தின்படி எந்தவொரு வழக்கில் கைதானாலும் அவரிடம் இருந்து கை, கால் விரல் ரேகைகள் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடமிருந்து மாதிரிகளை சேகரிப்பதில் ஒப்புதல் பெறுதல் என்பதுதான் இச்சட்டத்தின் மிகப்பெரிய விவாதப் பொருளாக உள்ளது.
இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டத்தின் சில பிரிவுகளை காவல்துறையினர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, "குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவுமே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதில் மனித உரிமை மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று கூறியுள்ளார். இச்சட்டத்தில் சிறப்பம்சங்கள் பார்ப்போம்.
> சிறைத்தண்டனை கைதிகள் அடையாள சட்டம் 1920-க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்தின்படி எந்தவொரு வழக்கில் கைதானாலும் அவரிடம் இருந்து கை, கால் விரல் ரேகைகள் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். அதாவது ரத்தம், தலைமுடி, சளி, எச்சில் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரிக்கலாம். குற்றவாளியின் புகைப்படம், கருவிழி, கையெழுத்து, பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்படும். இதற்கான முழு அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்படுகிறது. தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்தும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். மேலும், நீதிபதியின் உத்தரவின்பேரில் கைது செய்யப்படாத நபரிடம் இருந்தும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கலாம்.
மாதிரிகளைக் கொடுக்க கட்டாயப்படுத்தப்படலாமா?
குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடமிருந்து மாதிரிகளை சேகரிப்பதில் ஒப்புதல் பெறுதல் என்பதுதான் இச்சட்டத்தின் மிகப்பெரிய விவாதப் பொருளாக உள்ளது. சட்டப்பிரிவு 3-ன் படி கைதானவர் கண்டிப்பாக மாதிரிகளை அளித்தே ஆக வேண்டும். அதே நேரத்தில் கைதான நபர், பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிந்து, அதுவும் 7 ஆண்டு சிறைத் தண்டனை பெறக்கூடிய தன்மையானது இல்லை என்றால், உயிரி அடையாளங்களைத் தரக் கட்டாயப்படுத்த முடியாது என்ற ஒரே ஒரு விலக்கு உள்ளது.
அடையாளத்தைத் தர மறுத்தால் என்னவாகும்?
ஒருவேளை கைதான நபர் அடையாளத்தைத் தர மறுத்தால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி சட்டப்பிரிவு 3-ன் படி நிர்பந்திக்கப்படலாம். சட்டப்பிரிவு 6 உட்பிரிவு 2 ஆனது, அடையாளங்களை தர மறுக்கும் நபர் இந்திய தண்டனைச் சட்டம் 186-ன் கீழ் குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார். இது அவரது குற்ற எண்ணிக்கையைக் கூட்டும்.
அடையாளங்கள் என்ன செய்யப்படும்?
சேகரிக்கப்படும் அடையாளங்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் என்று சட்டப்பிரிவு 4-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. என்சிஆர்பி (National Crime Records Bureau)-க்கு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்ற சட்ட அமலாக்க அமைப்புகளிடமிருந்து குற்றஞ்சாட்டப்பட்ட யாருடைய ஆவணத்தை வேண்டுமானாலும் பெறும் அதிகாரம் உள்ளது. அவற்றை பாதுக்காக்கவும் அழிக்கவும் செய்யும் உரிமையும் என்சிஆர்பியிடம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தன்னிடம் தகவல் வேண்டும் எனக் கேட்கும் சட்ட அதிகாரம் உள்ள அமைப்புகளிடமும் பகிரும் உரிமையும் என்சிஆர்பிக்கு உள்ளது.
அடையாளங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதா?
ஒரு நபரிடமிருந்து பெறப்படும் தகவலானது, அது பெறப்பட்ட நாளில் இருந்து சுமார் 75 ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படும். ஒருவேளை அடையாளங்கள், உடல் அளவுகள் பெறப்பட்ட நபர் அதற்கு முன்னதாக எந்த ஒரு வழக்கிலும் குற்றவாளியாக நிரூபணமாகாமல் இருந்தும், தற்போது அவர் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் எனும் பட்சத்தில் அவருடைய தகவல்கள், உயிரியல் மாதிரிகள், உடல் அளவுகள் என அத்தனை விவரமும் அழிக்கப்படும்.
2022 சட்டம் எந்த வகையில் பழைய சட்டத்திலிருந்து வித்தியாசமானது?
1920 சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு ஓராண்டு அல்லது அதற்கும் மேல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் நபருடைய அடையாளங்கள் பெறப்படலாம். இதில் விசாரணையின் தேவைக்கு ஏற்ப நீதிபதி மாதிரிகளை சேகரிக்க உத்தரவிடலாம். ஆனால், 2022 சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாலே, அதுவும் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டால் கூட அவருடைய மாதிரிகள், அளவுகள் சேகரிக்கப்படலாம். மேலும், கைது செய்யப்படாத நபரின் மாதிரிகளை சேகரிக்க உத்தரவிடும் அதிகாரமும் நீதிபதிக்கு இச்சட்டத்தின் வாயிலாகக் கிடைக்கிறது.
மேலும், பழைய சட்டத்தின்படி எஸ்.ஐ. ரேங்கில் உள்ள விசாரணை அதிகாரி மட்டுமே இவ்வாறாக மாதிரிகளைப் பெறமுடியும். ஆனால், புதிய சட்டத்தின் படி காவல்நிலையத்தில் தலைமைக்காவலர் அந்தஸ்துக்கு குறையாத எந்த ஒரு காவலர் வேண்டுமானாலும் தகவல்களை, அளவுகளை, மாதிரிகளை திரட்டலாம். அதேபோல் தலைமை வார்டனின் பதவிக்குக் கீழ் குறையாமல் உள்ள சிறை அதிகாரிகளும் மாதிரிகளை சேகரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிபுணர்கள் முன்வைக்கும் ஐந்து பிரச்சினைகள்...
இந்தப் புதிய சட்டத்தின் ஐந்து பிரச்சினைகள் என்று நிபுணர்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளனர். அவை:
1. இச்சட்டம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள சட்டப்பிரிவு 14 வழங்கும் உரிமைகளை அத்துமீறுவதாக உள்ளது.
2. சட்டப்பிரிவு 20(3), ஒரு நபர் தனக்கு எதிராக சாட்சியாக மாறும்படி நிர்பந்தப்படுத்தக் கூடாது எனக் கூறுகிறது. ஆனால், இதனை இச்சட்டம் மீறுகிறது.
3. சட்டப்பிரிவு 21 வழங்கும் உரிமைகளை புதிய சட்டம் அத்துமீறுகிறது. உயிரியல் மாதிரிகளைப் பெறுவது அத்துமீறலாகிறது.
4. தலைமைக் காவலருக்கும் சிறை வார்டனுக்கும் மாதிரிகளை சேகரிக்கும் அதிகாரம் வழங்குவது துஷ்பிரயேகத்துக்கு மட்டுமே வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
5. சேகரிக்கப்படும் மாதிரிகள் 75 ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படலாம் என்ற கால நிர்ணயமே இந்தச் சட்டம் எவ்வளவு கடுமையானது; அதிகாரம் நிரம்பியது என்பதை உணர்த்துகிறது.
இவ்வாறாக சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் புதிய சட்டத்தின் குறைகள் என ஐந்து பிரச்சினைகளைப் பட்டியலிட்டுள்ளனர்.
அரசிதழில் வெளியீடு: இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து புதிய சட்டம் அதிகாரபூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது.
எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்: இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டத்தின் சில பிரிவுகளை காவல்துறையினர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா மூலம் குற்றவாளிகளை மட்டுமல்ல, பொதுமக்கள் அனைவரையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கீழ் கொண்டு வரும் என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
அமித் ஷா விளக்கம்: இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார். "புதிய சட்டத்தில் மனித உரிமைகள் மீறப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். குற்றவாளிகளின் உடல் பாகங்கள், உயிரியல் அடையாளங்கள் தொடர்பான தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவுமே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை" என்று அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
கவனத்துடன் பயன்படுத்தச் சொல்லும் நிபுணர்கள்: இதுகுறித்து சட்டத் துறை நிபுணர்கள் கூறும்போது, "அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் அமலில் உள்ளன. நவீன காலத்துக்கு ஏற்ப இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதில் அரசு துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கு அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். காவல் துறை மூத்த அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகளின் உடல் பாகங்கள், உயிரியல் அடையாளங்களை சேகரிக்க முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளனர்.
தகவல் உறுதுணை: லைவ் லா