

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இமாசல பிரதேசத்தில் உள்ள பியாஸ் நதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மனதை உருக்கும் இந்த காட்சி களைப் பார்த்த பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
ஹைதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 48 மாணவ, மாணவியர் கல்வி சுற்றுலாவாக குலுமணாலிக்கு சென்றனர். வழியில் மலைப்பள்ளத்தாக்கில் உள்ள பியாஸ் நதியை கண்டு, அந்த இடத்தில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வந்த வெள்ளத்தில் 24 மாணவ, மாணவியர் ஒருவர்பின் ஒருவராக அடித்துச் செல்லப்பட்டனர்.
மனதை உருக்கும் இந்தக் காட்சி, அமருஜாலா டாட் காம் என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியானது. இதில், கல்லூரி மாணவர்கள், தண்ணீர் குறைவாக உள்ள ஒரு இடத்தில் நதியின் நடுவே நின்று கொண்டு மிகவும் சந்தோஷமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென சில நொடிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கிறது.
அப்போது நதியின் நடுவே நின்று கொண்டிருந்த மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு நிற்கின்றனர். ஆனால், வெள்ளப்பெருக்கு அதிகமாகி, அனைவரையும் அடித்துச் செல்கிறது. அப்போது அந்த மாணவர்கள் மரண பயத்தில் தங்களை காப்பாற்றும்படி அலறுகின்றனர்.
அப்போது சக மாணவர்கள் நதியின் ஓரத்தில் ஓடி வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மாணவர்களைக் காப்பாற்ற துடிக்கின்றனர். ஆனால் முடியவில்லை. இதனிடையே, சிலர் நீச்சல் அடித்து கரை சேர முயற்சிக்கின்றனர். ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றனர்.
இந்தக் காட்சிகளை இணைய தளத்தில் பார்த்து, ஹைதராபாத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 25 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 18 மாணவர்கள், சுற்றுலா கைடு ஆகிய 19 பேரை தேடும் பணி தொடருகிறது.