Published : 10 Mar 2022 08:09 AM
Last Updated : 10 Mar 2022 08:09 AM

Election Results 2022 Updates: உ.பி.யில் பாஜக அமோக வெற்றி; பஞ்சாப்பில் வரலாறு படைத்த ஆம் ஆத்மி

உ.பி. வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடும் பாஜகவினர்

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. கோவாவில் தொங்கு சட்டசபை கணிப்பை பாஜக முறியடித்துள்ளது.

இவ்வாறாக நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப்பில் மட்டும் ஆளும் காங்கிரஸுக்கு பெரும் அடியைக் கொடுத்து ஆம் ஆத்மி 92 இடங்களுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

முன்னிலை நிலவரம் @ உ.பி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 274 இடங்களில் பாஜக முன்னிலை வகித்தாலும் கூட கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை ஒப்பிடும் போது பாஜகவின் வாக்கு வங்கி சரியும் என்று கணிக்கப்பட்டது. இரவு 10 மணி நிலவரப்படி 403 தொகுதிகளில் பாஜக 274, சமாஜ்வாதி 124, பகுஜன் சமாஜ் 1, காங்கிரஸ் 2 தொகுதிகள் என முன்னிலை வகிக்கின்றன. பாஜக கடந்த 2017 தேர்தலில் 39.3% வாக்குவங்கியைப் பெற்றிருந்த நிலையில் இந்தத் தேர்தலில் 44.6% வாக்கு வங்கி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் போது வாக்குவங்கி சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

கரோனா பேரிடரைக் கையாளத் தவறியது, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை எனப் பல விஷயங்கள் பாஜகவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நிலையில் அத்தனையும் முறியடிக்கப்பட்டு பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் வெற்றிக்கு இந்து வாக்காளர்களின் ஆதரவு, கரோனா பேரிடரின் போது அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்கள், மாநிலத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தியது ஆகியவை முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி வெற்றியை ஆம் ஆத்மி 92, காங் 18, அகாலி தளம் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் தனது செல்வாக்கை இழக்க முழு முதற் காரணமாக உட்கட்சிப் பூசல் கூறப்படுகிறது. இத்துடன் எங்கள் வெற்றி முடியப் போவதில்லை அடுத்ததாக ஹரியாணா, குஜராத் என்று எங்கள் பார்வை நீள்கிறது எனக் கூறியுள்ளது ஆம் ஆத்மி. இனி தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்று தாங்களே என்றும் ஆம் ஆத்மி முழங்கியுள்ளது.

கோவா: கோவாவில் தொங்கு சட்டசபை என்று கருத்துக்கணிப்புகள் கைகாட்டிய நிலையில், அவற்றை தவிடுபொடியாக்கி பாஜக முன்னிலை வகிக்கிறது. அண்மை நிலவரப்படி கோவாவில் பாஜக 20, காங்கிரஸ் 12, திரிணமூல் காங்கிரஸ் 2, ஆம் ஆத்மி 3, சுயேச்சைகள் 3 என்றளவில் முன்னிலை வகிக்கின்றன. 40 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட கோவாவில் 21 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி பெரும்பான்மை பெற்றுவிடும். இந்நிலையில் கோவாவில் 3 சுயேச்சைகளின் ஆதரவையும் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவது முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

உத்தராகண்ட்: 70 தொகுதிகள் கொண்ட உத்தராகண்டில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட நிலையில் அதற்கான பலன் கிட்டியுள்ளது. அண்மை நிலவரப்படி பாஜக 48, காங்கிரஸ் 18, பகுஜன் சமாஜ் 2, மற்றவை 2 என்ற நிலையில் உள்ளன.

மணிப்பூர்: 60 சட்டப்பேரவைகளைக் கொண்ட மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று பாஜக ஆட்சி அமைந்தது. இம்முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் என பெரும்பான்மையான முடிவுகள் வெளிப்படுத்தின. அண்மை வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக 32, என்பிபி 7, காங்கிரஸ் 5, ஐக்கிய ஜனதா தளம் 6, மற்றவை 10 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 36 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சிக்கு வெற்றி என்ற நிலையில் பாஜக 48 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், 2022 தேர்தல் வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவை தீர்மானித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x