இந்திய பிரதமருக்கும், தூதரகத்துக்கும் நன்றி.. உக்ரைனிலிருந்து காப்பாற்றப்பட்ட பாகிஸ்தான் மாணவி நெகிழ்ச்சி

இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாணவி அஸ்மா ஷஃபீக்
இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாணவி அஸ்மா ஷஃபீக்
Updated on
1 min read

உக்ரைனில் போர் பகுதியில் சிக்கியிருந்த தன்னை பாதுகாப்பாக ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் அமைந்துள்ள மேற்குப் பகுதிக்கு அழைத்துவந்த இந்திய தூதரகத்துக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் மாணவி ஒருவர்.

ஆபரேஷன் கங்காவின் உதவிக்கரம்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. அப்போது சுமார் 20,000 இந்திய மாணவர்கள் அங்கிருந்தனர். அவர்களை மீட்க ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது வரை 15000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி ஒருவரை போர்ப் பகுதியிலிருந்து மேற்கு எல்லைக்கு இந்திய அதிகாரிகள் மீட்டுவந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமருக்கு நன்றி: "நான் பாகிஸ்தானின் அஸ்மா ஷஃபீக். நான் உக்ரைனில் போர்ப் பகுதியில் மாட்டிக் கொண்டேன். என்னை பத்திரமாக இங்கு அழைத்து வந்த இந்தியத் தூதரத்துக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தியப் பிரதமருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிருந்து பத்திரமாக வீடு செல்வேன் என்று நம்புகிறேன்" என்று அந்த வீடியோவில் பாகிஸ்தான் மாணவி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டு மாணவர்களையும் மீட்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே வங்கதேச மாணவர் ஒருவரையும், நேபாள குடிமகன் ஒருவரையும் இந்தியா ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்டது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தைச் சேர்ந்த ரோஷன் ஜாவும், தன்னை மீட்ட இந்திய தூதர அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in