

புதுடெல்லி: ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,377 பேர் மீட்கப்பட்டனர். கீவ் நகரில் இந்தியர்கள் யாருமில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று காலை பதிவிட்ட ட்வீட்டில், கடந்த 24 மணி நேரத்தில் போலந்திலிருந்து புறப்பட்ட விமானங்கள் உட்பட இந்தியர்களுடன் உக்ரைனிலிருந்து 6 விமானங்கள் வந்துள்ளன. 1377 இந்தியர்கள் இதுவரை உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 நாட்களில் உக்ரைனுக்கு 26 விமானங்கள் அனுப்பப்படும். உக்ரைன் வான்பரப்பு வழி மூடப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் ரிபப்ளிக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்று வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லா, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இந்தியர்கள் யாருமில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கூறுகையில், "மிஷன் கங்காவின் கீழ் மார்ச் 8 ஆம் தேதி வரை 46 விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இவற்றில் 29 விமானங்கள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் இருந்து புறப்படும். 10 விமானங்கள் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட்டில் இருந்து புறப்படும். 6 விமானங்கள் போலந்தில் சீஸோவ் நகரிலிருந்தும் ஒரு விமானம் ஸ்லோவேகியாவில் கோசைஸ் நகரிலிருந்தும் புறப்படும். இந்திய விமானப்படையில் ஒரு விமானம் புக்காரஸ்டில் இருந்து இயக்கப்படும்.
உக்ரைனில் 20,000 இந்திய மாணவர்கள் இருப்பதாக இந்திய தூதரகத்தின் முதல் பயண எச்சரிக்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 12,000 பேர் ஏற்கெனவே வெளியேறிவிட்டனர். இது 60% ஆகும். எஞ்சியுள்ள 40% பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் தீவிர போர் நடைபெறும் கார்கிவ் பகுதியிலும் சுமி நகரிலும் சிக்கியுள்ளனர். கிட்டத்தட்ட 20% பேர் மேற்கு எல்லைகளை நோக்கி நகர்ந்துவிட்டனர். சிலர் எல்லையை அடைந்துவிட்டனர். சிலர் எல்லை நோக்கிய பயணத்தில் உள்ளனர்" என்று தெரிவித்திருந்தார்.