

உஜ்ஜைனி: மகாசிவராத்திரி விழா நாடு முழுவதும் சிவாலயங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலான மகாகாளேஸ்வர் கோயிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிமுதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மகாகாளேஸ்வர் கோயில் வளாகத்தில் நேற்று இரவுமண்ணால் செய்யப்பட்ட 21 லட்சம்அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது அயோத்தியில் தீப உற்சவ விழா கொண்டாடப்பட்டு லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன. அந்த சாதனையை விஞ்சும் வகையில் 21 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுவதாகவும் இதில் 14 ஆயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விளக்குகளை ஏற்றியதாகவும் விளக்குகள் முன்கூட்டியே தயாராக வைக்கப்பட்டதாகவும் உஜ்ஜைனி நகராட்சி கமிஷனர் அன்சுல் குப்தா கூறினார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கேற்றினார். 21 லட்சம் விளக்குகள் ஏற்பட்டது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உஜ்ஜைனி மாவட்ட ஆட்சித் தலைவர் அஷீஷ் சிங் தெரிவித்தார்.